வழக்கம்போல்
அப்பா
இன்றைக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றுடன்
கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்...
அந்தக்
கிணற்றடிக்குப் போனால் மட்டும்
சற்றே பைத்தியம்போல்
ஆகி விடுவார்...
காரணம்
மூடப்பட்ட கிணற்றின்
இடுக்குகளில் கசியும்
அம்மாவின் வாசனையாக கூட இருக்கலாம்...
என் பால்யங்களில்
ஆடைகளில் நீர் சொட்டச் சொட்ட
அந்த கிணற்றடியில்
விறைத்துப் போன அவளை
கிடத்திப் போட்டிருந்தது மட்டும் தெரியும்...
ஆனால்
அவள் விழுந்து இறந்ததற்கான காரணம்
யாருக்கும் தெரியாது
அப்பா உட்பட...
ஒருவேளை
தினமும் இரவு
அப்பா
கிணற்றடியில் அவளிடம்
அதற்கான காரணம் குறித்து
விசாரித்துக்கொண்டிருக்கலாம்
அல்லது
இன்னும் ஒரேயொரு முறை
அவளை புணர அழைக்கலாம்..!