புனிதங்கள்
அற்றுப்போன
சனிக்கிழமை
இரவில்
எச்சில்
கோப்பைகளை
உறிஞ்சி
நடமிடுகின்றனர்
பெயர்
தொலைத்த கடவுள்கள்
உரசி
உரசிப் பற்றும் தீயை
அணைக்கப்
பெய்கிறது
செயற்கை
மழை
மேலே
தொங்கிக்கொண்டிருக்கும்
”பேரல்”லில்
இருந்து
வடியும்
திரவத்தால்
உடலில்
சுரக்கும் போதைக்கு
வேறு
பெயர்
தனியாக
வந்ததால்
மேல்தளத்தில்
ஆடுபவர்கள்
கீழ்தளத்தில்
ஆடும்
ஜோடிகளைப்
பார்த்தபடி
உண்பதற்கு
இறந்த
கோழிகளின்
சமைக்கப்பட்ட
உடல்கள் மட்டுமே
அசைவம்
அவர்களுக்கு
கண்டதையும்
தின்னும் கண்கள்
கிடைத்ததை
உண்ணும் மனம்
காத்திருக்கும்
டாக்ஸி ஓட்டுனருக்கு
பசிக்கிறது
வயிற்றில்
மட்டும்
வீட்டுக்கு
நுழையும் முன்
மறக்காமல்
தலைமுடியைச்
சுருட்டி
“பேண்ட்”
போட்டுக்கொள்கிறாள் அவள்
அமைதியாய்
உறங்கிக்கொண்டிருக்கும்
பெற்றோர்
சனிக்கிழமைகளில்
அசைவம் சாப்பிடுவதில்லை.