துணைகோடல் - பா. சரவணன்





சுவரில் ஊரந்துகொண்டிருந்த
எறும்புகள்
கண்களின் வழியே
மனதில் புகுந்தன

வரிசையிலிருந்து
காற்றில் பறந்து
அவன் படுக்கையில் விழுந்த
ஒற்றைச் சிவப்பு எறும்பு
கால்களால் அவனைத் தூக்கிச் செல்கிறது
அசைந்து தூக்கம் கலைந்துவிடாதபடி
மென்மையாக

கண்விழித்துப் பார்க்கையில்
எறும்புகளுக்கிடையில்
படுத்துக் கிடக்கிறான்
எப்படி இவை பூதாகரமாயின
எனப் பிரமித்து
தனிமையில்

தலையை உயர்த்திப் பார்த்தவனை
நெருங்கிய எறும்பு ஒன்று
செல்லமாய்த் தட்டியது
தன் பெருத்த கால்களால்

மீண்டும் படுத்துக் கண்மூடி
தூங்குவதைப்போல் நடித்து
தூங்கிப்போனான்

மீண்டும் தூக்கிச் சென்று
படுக்கையில் போடலாம்
மொய்த்துக்கொண்டு
தின்றுவிடக்கூடும்
அல்லது
மிதித்துக் கொன்றும் விடலாம்

என்றாலும்

அவனுக்கு இப்போதைக்கு                                  
எறும்புகளே துணை