ஆசிரியர் பக்கம் - ஆர்.அபிலாஷ்



கவிஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா?
-    
போன வருடம் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் உள்ள எட்டில் இருந்து பத்தாம் வகுப்பு உள்ள தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளிடம் நவீன கவிதையை அறிமுகப்படுத்தி பேசினேன். அவர்களுக்கு பல கவிதைகள் புரிந்தன. நகுலன் கவிதை கூட. அதிலுள்ள கசப்பான சுயபகடியை ரசித்தார்கள். விக்கிரமாதித்யனின் மற்றொரு ஒரு சுயபகடிக் கவிதைக்கு அப்படி சிரித்தார்கள். சில்வியா பிளாத்தின் தற்கொலை பற்றி பேசி அப்படியே ஆத்மாநாமுக்கு வந்த போது மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளபளக்க கேட்டார்கள். மூன்று மணிநேரத்துக்கு மேல் நவீன கவிதை பற்றி மட்டுமே பேசினேன். 



யாரும் ஆர்வம் இழக்கவில்லை. இதற்கு ரெண்டு காரணங்கள். ஒன்று நம் மொழி கவிதையின் மொழி. இங்குள்ள பல சிறந்த நவீன கவிதைகளின் தொனியும் அனுபவமும் அவர்களுக்கு தொப்புள் கொடி வழியாக ஏற்கனவே பரிச்சயமாகி இருக்கிறது. தமிழர்கள் எல்லாராலும் கவிதை ரசிக்க முடியும். அடுத்து இந்த குழந்தைகளிடம் முன்னரே சில எழுத்தாளர்கள் நவீன இலக்கியம் பற்றி பேசி இருக்கிறார்கள். அவர்கள் சரியாக பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்கள். எந்த வகுப்பிலும் கூட்டத்திலும் நேரடியான ஒரு நல்ல நவீன கவிதையை வாசித்து பாருங்கள். சட்டென கவனிப்பார்கள்.
தமிழ்க் கவிதை என்னதான் நமக்கு நெருக்கமாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் விலகியே இருக்கிறது. கவிதை நூல்களை பிரசுரிக்க யாரும் தயாரில்லை (புது எழுத்து மனோன்மணி போன்ற மிகச்சிலரை தவிர). வாசகர்களும் கவிதை நூல் வாங்க தயாராக இல்லை (தமக்கு தெரிந்த சக கவிஞர்களின் நூலை ஒரு பரஸ்பர புரிதலின் அடிப்படையில் வாங்கும் மிகச் சிலரை தவிர). பொதுவாக கவிதை நூல் பிரசுர போக்கு இப்படி. நீங்கள் ஒன்று பதிப்புக்கான மொத்த காசையும் கொடுப்பீர்கள். அல்லது பிரசுரமான பின் ஐநூறு பிரதிகளை வாங்கி இலவசமாய் நண்பர்களுக்கு அனுப்பிவீர்கள். அல்லது பணம் கோராத பதிப்பாளர் கிடைத்தாலும் கூட உங்கள் தொகுப்பை பரவலாக கொண்டு சேர்க்க நூற்றுக்கும் மேல் இலவச பிரதிகளை அனுப்ப வேண்டும். நாவல், சிறுகதைகளுக்கு மதிப்புரைகள் மூலம் கிடைக்கிற குறைந்தபட்ச கவனம் கூட கவிதைத் தொகுப்புகளுக்கு இல்லை. அதனால் இப்படி இலவச பிரதிகள் மூலம் கவிஞர்கள் ஒரு மறைமுக வலைதொடர்பு உருவாக்குகிறார்கள். நிறைய சின்ன சின்ன கூட்டங்கள் நடத்துவார்கள். நாவலாசிரியனுக்கு நூல் வெளியீடு என்றால் அங்கு கவிஞர்கள், கட்டுரையாளர்கள் எல்லாரும் வருவார்கள். ஆனால் கவிஞர்களின் விமர்சன கூட்டத்தில் சக கவிஞர்கள் மட்டுமே வருவார்கள். பத்து நூல்களுக்கு கூட்டம் வைப்பார்கள். அதில் பத்து கவிஞர்கள் வருவார்கள். அதில் அவர்களது பத்து தொகுப்புகள் பற்றி அவர்களே மாறி மாறி பேசுவார்கள். புத்தக சந்தையை ஒட்டி ஜனவரியில் இருந்து மார்ச் வரை ஒரு புத்தகத்துக்கு பத்து கூட்டங்களேனும் பல மாவட்டங்களிலாய் நடக்கும். அதாவது பத்து புத்தகங்களைப் பற்றி பத்து எழுத்தாளர்கள் பத்து கூட்டங்களில் பத்து மாவட்டங்களில் பேசுவார்கள். போட்டோ எடுத்துக் கொண்டு கலைந்து போய் விடுவார்கள்.
இதையெல்லாம் யோசிக்கையில் கவிஞர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது உண்மை தான். அவர்கள் இலக்கிய நகரத்தின் புறநகர் “செம்மஞ்சேரிகளில்” தமக்குள் உரையாடி வாழ்கிறார்கள். இந்த இலக்கிய தீண்டாமை ஒருவிதத்தில் வாசகனுடன் கவிதைக்கு ஏற்பட்ட ஒரு துண்டுபடலின் விளைவு தான்.
நவீன கவிதை அதன் இயல்பிலேயே கொஞ்சம் பூச்சாண்டி காட்டுவது தான். நவீன கவிதை என்றில்லை தமிழின் சிறந்த சிறுகதைகள், “தண்ணீர்” போன்ற சில நாவல்கள் கூட பூடகத் தன்மை கொண்டவையே. நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் வாசற்படியில் உட்கார்ந்து சிக்கு களைந்து தலை பொறுமையாய் வாருவதை பார்த்திருப்பீர்கள். அந்த பொறுமையும் நுணுக்கமும் கவிதை வாசிக்கவும் வேண்டும். மெல்ல மெல்ல இழைகளை பிரித்து ஒரு வரிக்குள் புதைந்திருக்கும் பத்து வரிகளை வெளிக்கொணர ஒரு கற்பனையும் வேண்டும். இதெல்லாம் பயிற்சியில் வரும். எப்படி வண்டி ஓட்ட பயிற்சி தேவையோ அது போல் கவிதை படிக்கவும் பயிற்சி தேவை. ஆனால் கோடிக்கணக்கான கவிஞர்கள் உள்ள நம் நாட்டில் கவிதை எழுதவே தெரியும் எனக்கு வாசிக்க எதற்கு பயிற்சி என கேட்கிறார்கள். நாம் இந்த மூளைச் சோம்பலை முதலில் களைய வேண்டும்.
 எஸ்.ஆர்.வி பள்ளியில் நான் பேசிய பின் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் அவர்களது ஆசிரியர்களுக்கும் இது போல் பயிற்சி அளிக்க முடியுமா எனக் கேட்டார். இங்கு மற்றொரு சிக்கல் வருகிறது. பள்ளி பாடத்திட்டத்தில் போதுமான நவீன கவிதைகள் இல்லை. ஆசிரியர்களுக்கு நவீன கவிதை தெரிவதில்லை. நமது சங்கக் கவிதைகள் கூட ஆழமாக கற்பிக்கப்படுவதில்லை. ஆக பள்ளிக் கல்வியில் உள்ள சில பிரச்சனைகளை களைந்து நவீன கவிதையை பன்னிரெண்டு வயதில் இருந்து கற்பிக்க தொடங்கினால் கவிதையின் எதிர்காலம் பிரகாசமாகும்.
சின்ன வயதில் நிறைய வானம்பாடி கவிஞர்களை டி.வி., வெகுஜன பத்திரிகைகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். முன்னர் ராஜ் டிவியில் வைரமுத்துவின் கவிதைகளை காணொளியாக எடுத்து அவர் பின்னணி குரலுடன் காட்டுவார்கள். வசீகரமாக இருந்தது. இன்று விகடனில் வரும் கவிதைகளில் நவீன கவிதையின் தாக்கம் வெகுவாக உள்ளது. ஆனால் அவர்கள் நவீன கவிஞர்களை பிரசுரிக்க மாட்டார்கள். அவர்களைப் போல் எழுதுபவர்களை பிரசுரிப்பார்கள். இது மிமிக்றி போல. மார்க்கெட் இல்லாத நடிகர்களை ரசிக்க மாட்டோம். ஆனால் அவர்களை யாராவது மிமிக்றி செய்தால் ரசிப்போம். நவீன கவிதையை முன்னெடுப்பதில் வணிக இதழ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மலையாளத்தில் செய்கிறார்கள். நாமும் செய்யலாம். ஒரு காலத்தில் சுஜாதா எத்தனையோ சிறந்த நவீன கவிஞர்களை தன் பத்தி மூலம் அறிமுகம் செய்தார். நமக்கு இன்னும் நூறு சுஜாதாக்கள் வெகுஜன மீடியாவில் வேண்டும்.

நம்முடைய தீவிர இலக்கிய பத்திரிகைகளில் விமர்சனம் எழுதும் பாணியையும் மாற்ற வேண்டும். ஜிலேபி சுற்றுவது போல் கவிதை பற்றி எதையெதையோ எழுதி விட்டு தொகுப்பில் இருந்து கவிதை வரிகளை மேற்கோள் பண்ணி முடித்து விடுகிறோம். இது ஏதோ “வாம்மா மின்னல்” போல் இருக்கிறது. எளிமையாக நேரடியாக எழுதி கவிதையை எப்படி கற்பனையில் விரித்தெடுப்பது என விளக்க வேண்டும். அப்படித் தான் நல்ல வாசகர்களை உருவாக்க முடியும்.
கவிஞர்கள் பொதுவாக ஒரே மாதம் நான்கைந்து பத்திரிகைகளில் பிரசுரிப்பதை பார்க்கலாம். அதற்கான இடத்தை எடிட்டர்கள் அளிக்கிறார்கள். ஏதோ ரெண்டு பக்கம் என்றாலும் கொடுக்கிறார்களே! பிரச்சனை தமிழில் எழுதப்படுகிற ஆயிரமாயிரம் குப்பைக் கவிதைகள் சில நல்ல கவிதைகளை மறைத்து விடுகின்றன. அதிலும் தன்னைத் தானே காறித் துப்புகிற “சுயபுலம்பல்” கவிதைகள் ஒரு அரூப மொழியில் வாசகனின் தொண்டைக்குள் விரலை நுழைத்து கிளறுகின்றன. இவற்றை தொடர்ந்து படித்தால் ஜன்னி நோய்க்கு உண்டான எல்லா அறிகுறிகளூம் ஏற்படும். அடிப்படையில் இவை போலிக் கவிதைகள். வாழ்க்கையில் ஒரு பக்கம் எந்த சுயதேடுதலும் இல்லாதவர்கள் தாம் சுயம் பற்றி அழுகாச்சியாய் எழுதுகிறார்கள். அவர்களின் சுயபச்சாதாபத்திற்கு ஒரு வடிகாலாய் கவிதையை மாற்றுகிறார்கள். இன்று கவிதை நேரடியாக தகவல்பூர்வமாக சுயபகடியாக கதைகளாக வேறு விதமாய் மாறி வருகிறது. நாங்கள் இன்மையிலும் முடிந்தவரை தன்னைத் தானே துப்பிக் கொள்ளும் கவிதைகளை தவிர்க்கிறோம். இவை தான் வாசகனை கவிதையை வெறுக்க செய்கின்றன. கவிதை ஒன்றை சொல்ல வேண்டும். ஒரு வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். இன்று எழுதப்படும் அரூபக் கவிதைகள் நாய் தன் வாலைப் பிடிக்க முயல்வது போல் தம்மையே துரத்துகின்றன. சுயம் பற்றி தேடல் உள்ளவர்களே இக்கவிதைகளை எழுத வேண்டும். ஆனால் இப்போது போலிகளே எழுதுகிறார்கள்.
உலகம் பூரா கவிஞர்கள் தனிமைப்படுகிறார்கள். கவிதை நூல்கள் குறைவாக விற்கின்றன. கவிஞர் சல்மா ஒரு ஐரோப்பிய நாட்டில் நடந்த கவிதை வாசிப்புக்கு சென்ற அனுபவத்தை பற்றி எழுதியிருந்தார். ஒரு கிராமத்தில் ஒரு சின்ன அரங்கில் நான்கு கவிஞர்கள் சந்தித்து கவிதைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அதனால் நம் கவிஞர்கள் களைப்படைய வேண்டியதில்லை. புவி வெப்பமடைதல் போல் இது ஒரு உலகு தழுவிய நிலை.
இப்போது நாம் செய்ய வேண்டியது நிறைய மொழி பெயர்ப்புகள் மூலம் உலக கவிதைகளை இங்கே அறிமுகப்படுத்துவது, பள்ளி கல்லூரிகளில் சென்று கவிதை பற்றி பேசுவது, பத்திரிகை விமர்சனங்களில் தர்க்கபூர்வமாய் எளிமையாய் கவிதையை அலசி எழுதுவது ஆகியவை தான்.
இறுதியாக கவிஞன் தன்னைப் பற்றி மட்டும் அல்லாமல் தன்னை சூழ்ந்திருக்கவர்கள் பற்றியும் ஆர்வம் கொள்ள வேண்டும். சமூகம், அரசியல், அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், பொருளாதாரம் பற்றி எவ்வளவு கவிதைகள் வருகின்றன? மிகச் சில தான். ஒரு மீபொருண்மை (metaphysical) போக்கு நம் கவிதையை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. கட்டுரை, கதைகளிலும் பயிலும் எல்லா விசயங்களையும் நாம் கவிதைக்குள்ளும் பரிசீலிக்க வேண்டும். அப்போது கவிதை மீண்டும் மக்களுக்கு நெருக்கமாகும்.

ஒன்று சாகவில்லை என்றால் அதை உயிருடன் வைத்திருக்க முடிந்ததை செய்ய வேண்டும். நவீன கவிதையை தக்க வைப்போம்!