போகன் சங்கர்: கவிதைகளின் பலி கடா - கலாப்பிரியா


போகன் சங்கர் தற்போது எழுதி வரும் கவிஞர்களில் நிறையப் பேரின் கவனததை ஈர்த்த  கவிஞராக விளங்கி வருபவர். அவரது கவிதைகள் நல்லபிப்ராயத் தடத்திலேயே  பாதுகாப்பாகப் பயணம் செய்வதாக நினைக்கிறேன். அதிலும் அவருக்குப் பெண் வாசகர்கள்  அதிகம். இதில் எனக்கு ஆச்சரியமும் லேசான பொறாமையும் உண்டு. ஏனென்றால் என் ஆரம்ப காலத்தில் என் கவிதைகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  உண்மையில் இப்படியொரு இயைபான சூழலில் ஒருவருடைய கவிதை மனம்,கை தட்டலை நோக்கித்  தடம் புரள சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஆனால் போகன், iமீண்டும் மீண்டும் மாதிரி அச்சுக்களில் நகலெடுத்துக் கவிதை செய்யாமல் தொடர்ந்து,முக நூலில், புதிய, நல்ல கவிதைகள் எழுதி வருகிறார். அவரது ஸ்டாம்ப் ஆஃப் குவாலிட்டி விழாத சில  கவிதைகளும் வருகின்றன. அவற்றை தொகுப்பில் களைந்து விடுவார் என்று நம்பலாம். இந்தத் தொகுதியைப் பொறுத்தே அவர் அந்த மாதிரியான தேர்வைச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இதில் 112 பக்கங்களுக்கு 67 கவிதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கறாரான தேர்வுதான்.
     போகனின் வாழ்வுலகம் என்பது எனக்குப் பெரிதும் அறிமுகமானதாக இருக்கிறது. அவர் கவிதைகள் என் கண்ணில்ப் பட ஆரம்பிக்கையில் எனக்குத் தெரியாது அவர் நெல்லைக்காரர் என்று. ஊர் அபிமானம் என்ற கோதாவில் சொல்லவில்லை. ஒரு கவிதை இடமும் காலமும் சொற்களும் பொருட்களும் தாண்டியது. அவரது சில கவிதையின் காட்சிகளும் வாசனைகளும் எனக்கு மிக அறிமுகமானவையாக இருந்தன. எப்போதுமே சீக்கிரம் எழுந்து விடும், (காலையில் எப்படா போத்தி ஓட்டல் திறக்கும், எப்படா முதல் ஆளா ரவா தோசை சாப்பிடலாம் என்று சாகும் வரை ஆசைப்பட்ட), என் அப்பா பொங்கல் தீபாவளி நாட்களில் பின் வாசலில் வெந்நீர் போடுவதெற்கென்றே இருக்கிற பெரிய அடுப்பில் பெரிய செப்பானையில் - கரி பிடித்து செம்புப் பானை என்பதே அதன் கைப்பிடியில் மட்டுமே தெரியும்- வெந்நீர்ப் போட்டுத் தான் குளித்து விட்டு மேலும் தண்ணீர் விட்டு வைத்து விடுவார். ஒவ்வொருவராய்க் குளித்து விட்டு தண்ணீரை நிரப்பிக் கொண்டே இருப்பார்கள். அவரவர் பங்குக்கு அணையாத அடுப்பில் அவ்வப்போது ஓலையையோ விறகையோ திணித்து வைத்து விட்டும் போவார்கள்.தண்ணீர் மழுவாய்க் கொதித்துக் கொண்டிருக்கும். அந்த அதிகாலைக் குளிரில் வெந்நீர் ஒரு கொதி வாசனையுடன் உடல் மேலே வழிவது ஒரு சுகம்.
இந்த வாசனையும் குளிரும் அப்படியே நினைவுக்கு வந்தது,போகனின் இந்த வரியை வாசித்த மறு நொடியில் அல்லது வாசிக்கிற பொழுதிலேயே, அது
“ சற்றே பதம் மீறிக்
கடுத்து விட்ட
வெந்நீரின் சுகந்தம் எழும்பி
குளிரால் உறைந்த அறையை
இதமாய் அலைகிறது...
என்று நீளும் ஒருகவிதை.வெந்நீருக்கு தென்னை, பனை ஓலை மட்டைகள் எரிப்பதால் புகைதரும் மணம் ஒன்று போக இப்படி மழுவாகக் கொதிக்க வைக்கிறதால் ஒரு மணம் வரும். கவிதை இங்கே நின்றிருந்தால் கிட்டத்தட்ட அது  என் கவிதை போலிருக்கும்...ஆனால்
“ ஒருவன்
தற்கொலை செய்யவிருக்கும் நாள்
இப்படித் தொடங்கக் கூடாது
என்று நினைக்கிறான் அவன்..
என்று முடிகையில்தான் இந்தக் கவிதைகளின் புதுக்குரலைக் கேட்க முடிகிறது. கடுத்த சுவை, என்பது திர்நெல்வேலியின் அற்புதமான சொல் வழக்குகளில் ஒன்று.
     இரண்டு நிலப்பரப்புகள் காணப்படுகின்றன இவரது கவிதைகளில். ஒன்று திருநெல்வேலி, இன்னொன்று குழித்துறை. மீண்டும் இவற்றை நான் நிலப்பரப்பாகவே பார்க்கிறேன். ஏனென்றால் இரண்டாவதை நான் பார்த்த்தே இல்லை. முன் நிலத்தில் வேர் விட்ட மரம் பின்னதில் கிளைவிட்டு பூச்சொரிந்து கனி மொய்த்துக் கிடக்கிறது. வேப்பங்கனிகள் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் ஒரு நேர்ப் பேச்சில் அவர் சொன்னார், ஒருதோழி சொன்னதாக,உங்கள் கவிதைகளில் உங்கள் முன்னோடி ஒருவரின் கோணல் தெரிகிறது என்று சொன்னதாக. தோழி யாரென்று அவர் சொல்லவில்லை அதனால் நானும் அந்த முன்னோடி யாரென்று சொல்லப் போவதில்லை. இந்த நிலப்பரப்பு மாறுதல் என்பது அவரது வாழ்க்கை முறையை மாற்றி மொழி வெளிப்பாட்டின் தயக்கங்களையெல்லாம் உதற வைக்கக் கூடிய ஒரு திடத்தைத் தந்திருக்கிறதோ என்னவோ.. என்று நினைக்கத் தோன்றுகிறது.
     உதாரணமாக தசைச் சங்கிலி என்றொரு நீளக் கவிதை (அளவுக்கதிகமான நீளமும் கூட) கிட்டத்தட்ட ஒரு ஆட்டொ ரைட்டிங் போலான ஒரு கவிதை. அதைக் கவிதை என்று சொல்ல முடியாது, ஒரு வகையான ஸ்ட்ரே தாட்ஸ், ( தொட்டி மீன் போல, மூளையில் அங்குமிங்கும் அலையும் வார்த்தைகள் –கொஞ்சம் கோணலாய்ச் சொன்னால் தெரு நாய் போல நோக்கமில்லாமல் மூளையில் அலையும் வார்த்தைகள்) அதில் வருமொரு  வரியில், கன்னியாஸ்திரீயா, கண்ணிய ஸ்த்ரீயா என்று தெரியவில்லை. கன்னியாஸ்திரீயின் கர மைதுன டைரி என்றே நான் வாசிக்கிறேன். ஏனெனில் அதுவே போகனின் முத்திரை வரிகளாக ரசிக்கிறது. அதைக் கவிதையாக்குவது தசைச்சங்கிலி என்ற அதன் தலைப்பு. பொதுவாக இந்தத் தொகுப்பில் கவிதைகளுக்கு தலைப்புகள் அதிகமில்லை.நீளமான கவிதைகளுக்குக் கண்டிப்பாக தலைப்பு வைத்திருக்கிறார். ஒரு வேளை அவை கிரீடக்கவிதைகள் என்று நினைக்கிறாரோ என்னவோ. நீளக் கவிதைகள் பெரும்பாலும் வாசிக்கப்படாமலேயே போய்விடும் அபாயமிருக்கிறது. சுழிஎன்கிற நீளக் கவிதையின் சில அற்புத வரிகள் அப்படி அலுப்பு ஏற்படாமல்ப் பார்த்துக் கொள்கிறது. உதாரணத்திற்கு,
தாமிரபரணி ஆற்றில்...மழை வெள்ளத்தில் மிதந்து வருகின்ற
“கண்களை அசையாமல்
வானத்துக் காட்டிக்கொண்டு போகும் மாடு...என்று வருகிற காட்சி பகீரென்று நான் பார்த்த ஆற்று வெள்ளத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது.
இதே போல்,
இன்னமும் இருட்டு என்ற தலைப்பிட்ட கவிதையில்
“சுனை நீரில் நாகம் போலே
சத்தமின்றி
தெருக்களில் நழுவி
ஆற்றுக்குப் போனேன்...என்கிற வரிகளைப் படிக்கையில் ஆஹா இதைப் பார்த்திருந்தும் எழுதாம விட்டு விட்டோமே என்று நினைக்கத் தொடங்கியது. இதே போல் எலியின் கண்களை,தனது எண்ணெய்த் துளைக் கண்களால் என்னைப் பார்த்தது...என்கிற போதும் படிமம் சாகவே சாகாது என்று தோன்றியது.
     இப்படியெல்லாம் நினைக்க வைத்த கவிதை திடீரென்று நினைக்கவே முடியாத ஒரு உச்சத்தை தொடுகிறது, இந்த உதாரணக் கவிதையில்,
கவிதை 22 பக் 49
வெற்றிடத்தை
நினைவு வைத்துக் கொளவது.
சற்றுக் கடினம்
என் அறிகிறேன்

அதனாலேயே
இந்தக் குற்றங்களைச் செய்கிறேன்
தனலட்சுமி அக்காவுக்கு
அவ்வப்போது
பிளேடால் தன்னைக் கீறிக்கொள்ளும்
பழக்கம் இருந்தது

பின்னொருநாள்
அவள் கணவன்
அவள் மார்புகள் மேல்
சிகரெட்டால் எழுதிய படங்களை
அவள் எனக்குக் காண்பித்தாள்

நீ அவரைவிட்டு விடு என்றேன்
அவள்
நான் அவரை நேசிக்கிறேன் என்றாள்
அவர் அப்படி ஒன்றும்
மோசமான ஆளில்லை
என்றாள்
 வெற்றிடங்களை நிரப்ப
மனிதர்கள் எது எதுவோ செய்கிறார்கள்
என்று எனக்குக்குச் சொன்னது அவள்தான்
பின்னுமொருநாள்
அக்கா தன் மேல்
கிருஷ்ணனின் நிறத்தில் தளும்பும்
கெரஸினை ஊற்றி தன்னை எரித்துக் கொண்டாள்
அவளுக்குள் நிரம்பி வந்த
வெற்றிடத்தையா அவள் எரிக்க முயன்றாள்
வெற்றிடங்களை நிரப்ப
சிலர்
இல்லாமக் கூடப் போகிறார்கள்

நான்
இந்தக் குற்றங்களைச் செய்கிறேன்.


தனலச்சுமி அக்காக்கள்,ராமேஸ்வரி அத்தைகள்,கறுத்த பெரியமார்புள்ள யட்சிகள்...எல்லோரும் காமமும் காதலுமாக போகனின் கவிதைகளில் வருகிறார்கள். அவர்களுடன் இவரும் காமத்துடனும் காதலுடனும் கூடவே கவிதையுடனும் வாழ்கிறார்.
மனதில் முளைத்த சிறகுகளின்
வன்மைக்கு
கனவின் திசைகள் போதவில்லைஎன்று ஃப்ரான்சிஸ் கிருபா சொல்கிறது போல அற்புதமான திசைகளில் சஞ்சரிக்கிற பல கவிதைகளை போகன் எழுதியிருக்கிறார். எழுதிக் கொண்டிருக்கிறார்.
காமத்தைக் காதலிக்கிற கவிஞராக அவர் தன்னை தன் கவிதைகளில் நிறுவியிருக்கிறாரென்று சொல்லலாம். ஆனால் மார்க்குய்ஸ் தி சேடி பற்றி அதிகமாகக் குறிப்பிட்டாலும் இவருடைய கவிதைகளில் காதலும் காமம் நிறைந்திருந்தாலும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சேடிஸம் காணக் கிடைக்கிறதை உணர முடிகிறது.
பக் 82:கவிதை 43

ஐந்தாம் கிளாஸிருந்து அல்லது பத்து வயதிலிருந்து படிகிற பெண்பிம்பங்கள் அல்லது பெண்ணுடல்கள் பற்றிய மறைக்கப்படாத விவரணை இதில் மனத் தடையின்றி வருகிறது. ஆனால்,இதில் வருகிற ‘அனுமதிக்கப்பட்ட யோனிகளில் கூட ....என்ற வரிகள் அவரைக் கட்டுப்படுதுகிற விஷயங்களும் இருக்கின்றன என்று உணர்த்துவதாகவே படுகிறது.
காதல் பொய்த்த காமம் அல்லது காமம் உள்ளுறை காதல் என்ற திரிபு மன நிலை தெரிகிற கவிதைகள் பலவற்றை இதில் காண முடிந்தாலும் வாழ்வு என்ற ஒன்று குறித்த தரிசனமுடையவராகவே இருக்கிறார் கவிஞர். அதற்கான சான்றுகள்  தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது.
பக் 86 கவிதை 46
     சிலசின்ன அழகிய ஹைக்கூ போன்ற கவிதைகள் தொகுப்பின் இறுதியில் வருகின்றன. அவற்றில் சில அழகாகவும் உள்ளன .சில துணுக்குகளும் இல்லாமல் இல்லை.
உயிருள்ளவை ஒருபோதும் கச்சிதமானவையோ கறாரானவையோ அல்ல.அவை பிசிறுகளால் நிறைந்தவை.நவ மனிதனின் மிகப் பெரிய துயரமே அவனால் இந்தக் கச்சிதமின்மையை தாங்கிக் கொள்ள முடியாததுதான்.ஆகவேதான் அவன் கலையிலும் இலக்கியத்திலும் கச்சிதத்தை உருவாக்கிக் கொண்டே செல்கிறான்.இவையும் போகன் சங்கரின் வரிகளே. பொருட்படுத்தத் தக்க கச்சிதமான வரிகளைப் படைத்த ஒருவருக்கு இப்படிச் சொல்ல உரிமையிருக்கிறது.
. If one has a talent, one is also its victim; one lives under the vampirism of one’s talent.” என்று நீட்ஷே சொல்வது போல் போகன் தன் கவிதைகளின் பலி கடா. அவர் நமக்குப் படைக்கப் பட்டிருக்கிறார். என் வாழ்த்துக்கள்
*