ஷாப்பிங்கின் போது ஒரு மயிரிழை தப்பித்தல் - புக்காவஸ்கி (தமிழில் ஆர்.அபிலாஷ்)





சூப்பர் மார்க்கெட்டில் இன்று என் தள்ளுவண்டியை
உருட்டியபடி போகையில்
அலமாரி அடுக்குகளில் இருந்து கேன்களை தட்டி விடலாம்
கூடவே டவல் சுருள்களை, டாய்லெட் பேப்பர்களை, வெள்ளி தாள்களை
கீழே தள்ளிடலாம்
என மனதில் ஒரு எண்ணம் ஓடியது,
ஆரஞ்சுகள், வாழைப்பழங்கள், தக்காளிகளை
காற்றில் வீசி எறியலாம், குளிர்பதன பகுதியில் இருந்து
பியர் கேன்களை எடுத்து குடிக்க தொடங்கலாம்,
பெண்களின் பாவாடைகளை தூக்கி, குண்டியை பற்றலாம்,
என் ஷாப்பிங் தள்ளுவண்டியை கண்ணாடிப் பலகை மீது
பலமாய் மோதி நுழைக்கலாம்…
பின்னர் இன்னொரு எண்ணமும் தோன்றியது:
பொதுவாக நாம் ஒன்றை செய்யும் முன்
அதை பரிசீலனை செய்வோம் தானே…

தள்ளுவண்டியை என் பாட்டுக்கு தள்ளிப் போனேன்…
சின்ன சதுரங்கள் வரைந்த பாவாடை அணிந்த ஒருத்தி
வளர்ப்பு பிராணி உணவுப் பகுதியில் குனிந்து நிற்கிறாள்.
அவள் குண்டியை பிடிக்கலாமா
என பலமாக யோசித்தேன்,
ஆனால், வேண்டாம், நகர்ந்து விட்டேன்.
தேவையான பொருட்களை குவித்தபடி என் தள்ளுவண்டியை
கல்லாவுக்கு உருட்டினேன்.
சிவப்பு அங்கி அணிந்து அதில் பெயர் தாங்கிய பாட்ஜ் அணிந்த
ஒருத்தி அங்கு எனக்காக காத்திருந்தாள்.
பாட்ஜில் அவள் பெயர்
“ராபின்”
ராபின் என்னை நோக்கினாள்: “எப்பிடி இருக்கீங்க”,
அவள் கேட்டாள்.
“நல்லா இருக்கேன்”, நான் சொன்னேன்
பிறகு அவள் என் சாமான்களை பட்டியலிடத்
தொடங்கினாள்,
தன் முன்னே நிற்கிறவன்
இரண்டு நிமிடங்கள் முன்னர் தான்
பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு
ஒரு பிடி தொலைவில் இருந்தான்
என சற்றும் உணராமல்.