நகுலன் எனும் அதிர்வு - ஆத்மார்த்தி



             நகுலன் வாழ்ந்த ஸ்படிக காலமல்ல இப்போதிருப்பது.எந்தக் கவிசொல்லியும் சோற்றுக்கு உப்புப் போல் கொஞ்சம் மனமுறிவைக் கைக்

கொள்கிறார்களோ என்ற அச்சம் தற்போதைய கவிதைகளினூடே பயணிக்கிற சந்தர்ப்பங்களில் வாய்க்கிறது.இதனூடே இன்னுஞ்சில வார்த்தைகள்.நான் மட்டுந்தான் பயித்தியமாக்கும் என்று சொல்லிக்கொள்ள எந்தப் பயித்தியத்துக்கும் உரிமை உண்டு தானே..?என் பயித்தியத்தின் மீது எனக்கு அபார நம்பிக்கை.

               நகுலனின் கவிதைகளினூடே பயணிக்கையில் லேசாக மனம் அதிர்வதென்பது காலங்கடந்து நீடிக்கும் அதிசயம்.ஆஃபர் கார்டுகளுக்கும் ட்யூ

டேட்களுக்கும் நடுவாந்திரத்தில் இன்னமும் பெரு நகர அல்கோபேனல் கட்டிட வாசல்புறங்களில் தள்ளு வண்டிகளில் சூடாய்க் காத்திருக்கும் சோளக் கருதுகள் போலத்தான் நகுலனின் கவிதைகளும்.சாஸ்வதம்.நகுலனின் கவிதைகளில் நான் அறிந்த வரையில் ஒரு தனிமையின் இரண்டு பிரதிகளாய்த் தன் மனதைக் கலைத்துப் போட்டுவிட்டு இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமாய் மாறியாடும் விளையாட்டுப் பித்தனின் வார்த்தைகளை
அதிகம் காணுகின்றேன்.மேலோட்டமாய்ப் பார்த்தால் இதென்ன பிரமாதம் என்று சொல்லத் தக்க வார்த்தைகளை நவ வாழ்வில் இன்னமும் பலவீனமாய் பிரயோகித்துக் கொண்டே வாழ்வின் அங்கலாய்ப்பில் பயணிக்கிற அனைவருக்குமான வார்த்தைகளைக் கொண்டே தன் கவிதைகளை பெரும்பாலும் அமைத்துவிட்டிருப்பது நகுலனின் சாமர்த்தியம்.வேறொன்றுமறியாப் பிள்ளை மனம் உதிர்க்கும் உளறல்களின் ஒழுங்கின்மை போன்றதே அவை.அத்தனையும் பித்து.அத்தனையும் சத்தியம்.அத்தனையும் அசரீரமும் கூட.

             நகுலனின் கவிதைகளில் சஞ்சாரிக்கலாம்.


      
"உண்மைக் கவிஞன் அவன்
      
என்றுமே பிச்சைக்காரன்
     
வெறும் பயித்தியம்"

  என்று அவர் சொன்ன வரிகளை எல்லோர்க்குமான ஆசீர்வாதமாய்க் கொண்டபடியே.


நகுலனின் சொற்களில் இருக்கக் கூடிய நேர் தன்மைகள் அபூர்வமானவை.சோரமாடுவான் என்று ஒரு கவிதையின் வரியில் இருக்கும்.அதற்கு முன் பின் தமிழ் படைப்புக்களில் இச்சொல்லாடலை வேறெங்கும் கண்டதாக என் வாசகானுபவம் தெரிவிக்கவில்லை.இதுவும் ஒரு சொல்லா..?இதனை எளிதில் நகர்த்திப் போய்விட முடியுமா..? 

சோரமாடுவான் 
என்றாலும் 
அவன் நா 
நாஸ்துதி 
அறியாது.

இத்தனை உக்கிரம் தேவையாயிருந்திருக்கிறது. தேவை உக்கிரம் இவ்விரண்டும் ஒன்றை இன்னொன்று கைபிடித்து வரவழைத்து விடுவது தானே..?
          நா நாஸ்துதி அறியாது என்று சொல்லுகையில் முன் வரியில் சோரமாடியவனை நேர்பட நிறுத்திச் செருக்காய்த் தெரியப்படுத்தும் வித்தை நகுலனின் வாத்சல்யம் என்றால் அதற்கடுத்து வரக் கூடிய வரிகள்


  
 வழிகள் பல என்றாலும்
  
உண்மைக்கு முகம்
  
ஒன்றே 
  
என்பதறிவான்!

இப்போது உண்மைக்கவிஞன் என்னும் பதம் பெரும்பளுவாய்க் கனக்கிறது.இதன் மேல் கண்ணோடிப் பார்த்தவர்களின் மனதாழத்தில் பதிந்து அழுத்துகிறது.
            நகுலனின் வார்த்தைகளில் எங்கேயும் தொனிக்கும் அசரீரத்தைத் தனியே எடுத்துக் கோர்த்தால் ஒருவேளை இவ்வுலகம் மொழியால் அழியுமோ என்னும் பயம் உருவாகிறது.இத்தனை பாரத்தை எளிய வார்த்தைக் கோர்வையில் கொணர முடிந்திருக்கிறதை வியப்போடு பார்க்கிறேன்.

      ஒரு நீண்ட கவிதையை இகர முதல்விக்கு சமர்ப்பிக்கிறார்  நாலுவரி எழுதி


 
 ஆகாய வடிவமான
 
உன்னை நான்
 
ஊழிதோறும் 
 
தேடி நின்றேன்.

நகுலனின் மேற்காணும் நாலுவரிகளுக்குள் ததும்பும் பொய்யிலாத் தன்மை நம்மை அச்சுறுத்துகிறது.அப்படி ஒரு நிலை நிற்கிற வாய்ப்பு யார்க்கு வாய்க்கும்.,.?இகரமுதல்வி அறிவாளோ ஒரு வேளை.?

               நீள் கவிதையில் இன்னோர் பகுதியில்

"
பால் வரை தெய்வம்"

என்கிறார்.

வீடு வரை உறவு என்னும் திரைப்படப் பாடலின் மொத்த வரிகளும் எனக்குள் ஒருகணம் மீவருகை நேர்த்துப் போகின்றது.

நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமே இல்லை


இந்த வரிகடைசியில் வரும் ஒரு ஒன்றுமே இல்லை என்பது நம்வாழ்வின் பயன்பாட்டில்
என்றைக்கேனும் உணர்ந்திருக்கிறோமா...?வெகுவாய் அயர்ச்சியைத் தரும்  விஷந்தடவின
சொல்லாடல் இது.எல்லோர்க்கும் வாய்க்காது.

மனிதன் 
ஒரு வலை பின்னும் சிலந்தி
அடுத்துக் கெடுக்கும் மித்திரன்


நட்பின் உன்னதங்களை ஒற்றைப் பிரயோகத்தில் சுக்குநூறாக்கிச் செல்கிறது நகுலனின் 
கண்டடைவு.எனக்குந்தான் எனக்குந்தான் என்று நாம் சுட்டிக் காட்டுகிற இடத்தில் உரக்க
சப்திக்க விரும்புகிற இவ்வரியை நம்மைச் சுட்டுகிற இடத்தில் நாம் காணாமற் போகிறோம்
அல்லாது போயின் கதைகளைத் துவக்குகிறோம்.
         நகுலனின் இரு நீண்ட கவிதைகளுக்குள்ளேயும் இருக்கக் கூடிய உப-கவிதைகளை

முன் பின் கலைத்து போட்டால் இன்னும் பல்லாயிரக்கணக்கான கவிதைகளைக் கொண்டு
வரலாம் என்பது சத்தியம்.உலகில் வெகு சொற்பமாய் எழுதப்பெற்ற நிகழ்தகவுக் கவிதைகளில்
இவ்விரண்டு கவிதைகளுக்கும் தனித்த இடமொன்று என்றே சொல்லலாம்.
                 உற்று நோக்கினால் நாக்கு என்பதை நகுலன் நாயினும் கீழாய் நடத்திப் 

பார்க்க விழைவது புரியும்.நாக்கின் மானுடக் கள்வம் எத்திசையிலும் புரண்டு படுக்கும்
சுயநலக் கபடம் ஆகியவற்றை அனேக இடங்களில் நகுலன் சொல்லிச் செல்கிறார்.சில
தனித்த இடங்களில் மனித நாக்கும் சொல் மாறுதலும் நம்பிக்கை துரோகமும் அனாதித் தனமும்
ஆக இவையெல்லாமும் உள்ளே ஒளிந்துகொண்டுமிருக்கின்றன.பல இடங்களில் அவை
மிக நேரடியானவை.
      நகுலனின் வார்த்தைகளுக்குள் இருக்கும் சங்கேதங்கள் அவர் மட்டுமே அறிந்தவையாய்

இருந்திருக்கக் கூடும்.ஆழ் நிலப் புதையல்களைப் போல அவரவர் மன விகாரங்களுக்கு
நடுவாந்திரத்தில் தன்னியல்பாக அந்தச் சங்கேதங்கள் முன்பின்னாக உயிர்த்தெழுவதற்கான
வாய்ப்புகளில் அவை தம்மை மறுபடியும் நிகழ்த்திக் கொள்ளுகின்றன.நகுலன் அனேக இடங்களில்
தன் கவிதைகளை ஒரு சேதி சொல்லுகிற தொனியில் படைக்கிறதாகவே கொள்ளவேண்டியிருந்தாலும்
அதனை உடைத்துப் பல இடங்களில் பல கவிதைகள் அந்தச்சேதியைத் தாண்டி அரூபத்துலிருந்து 
அசரீரமாக ஒலிக்கின்றன.

     
ஏகம் தெய்வமென்றால்
     
பாவம் மனிதன் என்ன செய்வான்..?
     
ஏகம் தெய்வமென்றால்
      
தெய்வம் ஏகமன்று காண்"

         என்னளவில் நகுலனிடத்தில் பாரதியின் கவிதைகளில் காணப்பெறும் த்வனி பெருங்கோபம் உள்ளிட்ட பலவற்றையும்

நம்மால் வேறு சதவீதங்களில் கண்டுகொள்ள முடிகிறது.இயலாமையைக் கோபமாக மாற்றிக்கொள்ளும் வார்த்தைப்பாடுகளை
நகுலன் இயலாமை காலத்து மௌனமாக மாற்றித் தர விழைவதை நகுலனின் பல கவிதைகளில் உணரலாம்.இன்னது
இன்னது என்று ஒவ்வொரு முன் வரையறைக்குள் பொருத்தாமல் கலைடாஸ்கோப்பினுள்ளே காத்திருக்கும் வளையல்
துண்டுகள் நேர்த்தித் தருகிற விதவித பிம்பங்களென நகுலனின் வார்த்தைகள் நம்மை அழைத்துச் செல்லும்
நீட்சியும் இருக்கின்றது.
                அகராதிகள் நிகண்டுகள் துவங்கிச் செப்பேடுகள் வரைக்கும் பிரயாணித்துத் தெரிந்த சொல்லின் தெரியாப் பிற சொற்களைக்

கைக்கொண்டு தமது கவிதைகளைக் கட்டமைத்து விடக் கடினப் பிரயாசை கொள்ளும் கவிஞர்களுக்கு மத்தியில் நகுலன் ஒரு
சொல்லைக் கூடக் கடினமானதாய் எடுக்காமல் தன் அத்தனை கவிதைகளையும் எழுதிவைத்தது பெருஞ்செயல் தான்.அதனாலேயே
நவ விரும்பிகள் சிலர் அவர் கவிதைகளை இலகுவாக எடுத்துக் கொண்டு எள்ளுவதும் நேர்ந்திருக்கலாம்.ஆனால் நம் அருகாமையில்
இருக்கக் கூடிய வாழ்பிரயோகத்தில் உயிர்த்திருக்கக் கூடிய ஒரே காரணத்தால் ஒரு கவிதையை இலகுவாகக் கொள்வதென்பது 
வன்முறை.அராஜகம்.

       
 கடல்
        ************
       
அலைகளைச் சொல்லிப்
       
பிரயோஜனமில்லை
       
கடல்
       
இருக்கிற வரை
                 இந்தக் கடல் என் உடலெனக் கொள்கிறேன்.என் உடலின் இருத்தலை பகடி செய்கிறேன்.உள்ளே ஆறாது புரண்டு

கொண்டே இருக்கும் மனதின் அரூப அலைகள் ஒருபுறம் என்பேன்.இன்னொரு புறம் என் ஸ்தூல உடலின் உள்ளோடும் குருதி அலைகள்
என்றால் அது கச்சிதம்.நகுலனின் கவிதைகள் என் மனதோடு வெகு நெருக்கமாக உரையாடுகின்றன.காத்திருக்கும் பேசும் பொம்மைகள்
எனச் சமர்த்தாயிருக்கின்றன.நான் அவற்றின் அருகாமைக்குச் செல்லுகையில் அவை என் பக்கம் திரும்பி என்னை இன்னொரு தரம்
 முத்தமிடுகின்றன.


 
கடைசிக் கவிதை
 *************************

   
யாருமில்லாத பிரதேசத்தில்
  
என்ன நடந்துகொண்டிருக்கிறது
  
எல்லாம்

      இந்த ஒரு கவிதை குறித்துப் பேசுவதற்கு வாரக்கணக்கில் ஆகும்.நகுலனின் ஆளுமை இப்படி வெகு நேரான சின்னஞ்சிறிய
வரிகளை அசுரம் ஏற்றி விளையாடச் செய்வது தான்..இப்படி நான்கு வரிகளில் பிரபஞ்சத்தின் கதை மொத்தத்தையும் முடித்து
வைக்க நகுலனால் மட்டும் முடிகின்றது.

          
   மூச்சு 
           *****************
        
நின்றுவிட்டால்
        
பேச்சும் அடங்கும்

      மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் என்ற இந்தக் கவிதை வரிகளை நீட்டித்து ஒரே வாக்கியமாக்கினால் இதெப்படிக்

கவிதையாகும்..?இது எல்லோர்க்கும் தான் தெரியும்..?என்றெல்லாம் கூடக் கேள்விகள் வரக்க்கூடும்.ஆனால் இந்த வரிகள் துவங்கும்
முன்னரும் முடிந்த பின்னரும் ஆன இருவேறு இடங்களை உற்று நோக்கினால் முன்னது மௌனமாகவும் பின்னது சூன்யமாகவும்
இருப்பதை உணரலாம்.என் ஆவலாதியில் இப்படி எழுதிப் பார்க்கிறேன்
    
முன்னது
   
மௌனம்
   
பின்னது
   
சூன்யம்


இல்லையா..?சிந்தித்தால் நகுலனின் கவிதைகள் மிக ஒழுங்கான விரிசலை ஒத்த சிதைவைத் தனக்குள் உணர்ந்துகொண்ட
அவரது மனப்பிசகைக் கட்டுக்குள் கொணர்த்த அவரது தன்னந்தனிமையும் இயலாமையும் ஒன்று சேரும் புள்ளிகள் என்பதை
உணர முடிகின்றது.நகுலனை விமர்சிப்பவர்கள் எந்தெந்தக் கவிதையை எல்லாம் கவிதை இல்லை என்று சொல்வார்களோ
அல்லாது எந்தக் காரணங்களுக்கெல்லாம் நகுலனை எள்ளத் தலைப்படுவார்களோ அதே அந்தக் காரணங்களுக்காகவும் 
கவிதைகளுக்காகவும் கொண்டாடப் பெருங்கூட்டம் உண்டென்பது விந்தையில்லை.நிஜம்.
        
தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி