கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா கவிதை
1
ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பு
ஆசை ஒரு கனியை தூக்கிக்கொண்டது
மரத்திற்கு மரம் தாவியது
பிறகு அது ஒரு பெண் மீது பாய்ந்தது
அவள் நாற்றத்தை சுமந்து
மழையில் நனைந்து
வானத்திலிருந்து வரும் இடி சத்தத்தை உண்டது
பிறகு ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு
குகைக்குள்  ஒளிந்தது
மின்னலை  விசிறியடித்த நிலத்தை உழுது
உயிர்களை மண்ணிலிருந்து எடுத்தது
கற்காலத்திலிற்குப் பிறகு
ஆகாயத்தை புத்தகமாக்கியது
நதியை வணங்கியது
முன்னோர்களை கற்களால் நட்டுவைத்து
வரலாற்றை எழுதத் தொடங்கிற்று
ஆசைகள் இயக்கிக்கொண்டிருந்தது
ஆளுக்கொன்றாய் பிரிந்து
தன்னை விஸ்தரித்துக்கொண்டது
ஒரு ஆசை காடுகளை ஆண்டது
ஒரு ஆசை புத்தகங்களை ஆண்டது
ஒரு ஆசை பெண்ணிடம் குடும்பம் நடத்தியது
ஒரு ஆசை வானத்திலிருந்து
கண்ணுக்கு தெரியாதவர்களை வரவழைத்தது
ஒரு ஆசை வேட்டையாடி களைத்தது
ஆசைகள் மனிதர்களை ஒவ்வொரு யுகங்களாக
தள்ளிக்கொண்டு வந்தது
ஒரு கட்டத்தில் ஆசைகள்  கருத்தரித்தது
பொதுப்பெயரில் இருக்க விருப்பமில்லாத ஆசைகள்
தனித்தனி பெயர்களை சூட்டிக்கொண்டது.
2
எல்லோரையும் பயமுறுத்திய படி
தெருவில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவன்
வழியில் கிடந்த ஒரு நாய்யை எட்டி உதைத்தப்பிறகு
அப்பாவி என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்தான்
அப்பாவிகளின் மொழியை பேசினான்
அப்பாவி மொழிக்கு சேவை செய்த
பரம்பரையென்றான்
தற்காலத்தில்
அப்பாவிகள் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள்
வருடாவருடம் விழா கொண்டாடுகிறார்கள்
கட்-அவுட்டுகளும்
ஊர்வலங்களும் பாலாபிஷகங்களால் அந்த நாட்களை நிரப்புகிறார்கள்
ஆண்டவனையும் அப்பாவி பட்டியலுக்குள்
வைத்துவிட்ட பிறகு
ஊருக்குள் ஏகப்பட்ட கனவுகள்
ஆண்டவன்களோடு கை கோர்க்கின்றன
அப்பாவிகளின் கதைகள் படிக்க சுவாரசியமானவை
அதிகாரத்தோடு விளையாடுவார்கள்
வருமான வரித்துறையோடு கண்ணாமூச்சி ஆடுவார்கள்
ஒவ்வொரு நாளுக்கும் குறைந்த பட்சம்
பத்து அவதாரங்களின் முகங்களை கழற்றுவது
அப்பாவிகளின் பொழுது போக்கு
அப்பாவிகளுக்கும்  பாவிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது
இருவரும் பலி பீடம் வைத்திருக்கிறார்கள்
அந்த பலி பீடத்தில்
சோற்றுக்கு திண்டாடும் பாவிகள்
இலவசமாக தற்கொலை
செய்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.


3
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோபம்
ஒரு எலியின் துணையோடு
வெளியே சென்று
வன் முறையின் வலைகளை அறுத்து விடுவதாக கூச்சலிட்டது
கூச்சலை சகிக்காமல்
பின்னாலே வந்துக்கொண்டிருந்த இயலாமை
அதன் பின் மண்டையில் ஓங்கி அடித்து
சமாதியாக்கியது
அந்த வழி வந்த அநீதி
சிரிப்பை அடக்கிய படி
மெளன அஞ்சலி செலுத்தி நகர்ந்தது
தன் பழங்கால அரண்மனைக்கு.

4
சாத்தப்பட்ட கதவுக்குள்
இருட்டை பூசிய அறைக்குள்
செல்பேசி வழியாக நுழைந்தவள்
தன் ஆடைகளை களைந்தாள்
பிம்பங்களை அழித்தாள்
மேலே படுத்துகொண்டிருந்த
கவிதையை தூக்கியெறிந்தாள்
உடலுக்குள் இருந்த குளிர்ந்த கதவுகளை மூடி
வெப்பத்தின் மெல்லிய சன்னலை திறந்தாள்
பாதி திறந்த உதடுகளின் மெளனத்தை உறிஞ்சி
உடலெங்கும் பூசினாள்
இரண்டு உடல்கள் மோதிக்கொண்டதை
காட்டினாள்
இருட்டுக்குள் கண்கள் முளைத்தவுடன்
அறையில் மிதக்கும் தடயங்களில் நீந்தி
அலை பேசிக்குள் புகுந்து
கதவை சாத்திகொண்டாள்
காமவயப்பட்ட இருட்டின் கைகளில்
மாட்டிக்கொண்டது
நானும் என் படுக்கையும்.