விடைபெறுதல் - குமரகுரு

உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்
மறந்து வைத்த கண்ணாடியைப் போல
என்னைத் தேட வேண்டாம்
உடைந்த பொம்மையில்
என் முகம் தெரியும்
கட்டுப்படுத்துங்கள் நினைவுகளை
கண்களை மூடிக்கொண்டு என் உலகை
பார்க்கும் நீங்கள் இருக்க போவதில்லை
அதில்!

என் விடைபெறலை
மகரந்தம் பூவைப் பிரிவது
இரவு பகலை பிரிவது
கர்ப்பத்தை பெண் பிரிவது
என்று ஒப்பிட மாட்டேன்

என் விடைபெறல்
குழந்தையை தொலைத்த இரப்பர்
மரத்தை இழந்த வேர்
விவசாயம் மறந்த வயல்
போன்று ஒரு கால கட்டாயம்

என் விடைபெறலை எண்ணி
நீங்கள் வருந்தலாம்
கண்ணீர் வடிக்கலாம்
என்னை வசை பாடலாம்

நான் கோருவதெல்லாம்
என் விடைபெறலை
பழகி கொள்ளுங்கள்