விஷால் ராஜா கவிதைகள்






அவளை இப்போது ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார்கள்.
பிழைப்போமோ இல்லையா என்பதில் உத்தரவாதம் இல்லை.
சலிப்பின்றி உழைத்த உடல் அவளுடையது
உழைப்பதிலேயே அவள் தன் வாழ்வின் அர்த்தத்தை கண்டு கொண்டாள்
அதுவன்றி அவள் வேறெதுவுமில்லை
தன் கணவர் பற்றி அவளுக்கு முழுமையாக எதுவும் தெரியாது.
அவளது கணவருக்கு அவளை மீறிய திசைகள் உண்டு.
தன் மகனை பற்றி அவளுக்கு முழுமையாக எதுவும் தெரியாது. 
அவளது மகனுக்கு அவளுக்கு தெரியாத நிறங்கள் உண்டு.
தன் மகளை பற்றி அவளுக்கு முழுமையாக எதுவும் தெரியாது.
அவள் செல்லவே முடியாத வழிகளை
அவளது மகள் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறாள்.
ஆனால் அவளுக்கென்று அவளுடைய வீடு இருக்கிறது.
அது அவளால் மட்டுமே ஆனது.
அவளை மீறிய திசைகள் அறியாதது.
அவளுக்கு தெரியாத நிறங்கள் இல்லாதது.
அவள் செல்ல முடியாத வழிகள் அற்றது.
மூக்கில் எதையோ கொண்டு வந்து வைத்தார்கள்.
குளிர்ந்த அடர்த்தியான காற்று.
மூச்சுத் திணறியது. பின் சீரானது.
அவள் பத்து வருடங்களுக்கு முன்பு வளர்த்த
வெள்ளை நாயை நினைத்துக் கொண்டாள்.
அதை ஒரு நாள் யாரோ கல்லால் அடித்துவிட்டார்கள்.
முன்னங்காலில் காயம்.
நொண்டியபடி வீட்டுக்கு திரும்பி வந்த அதற்கு 
அவள் தன் கையாலயே மருந்து தடவி விட்டாள்.
அது இருட்டில் போய் படுத்துக் கொண்டது.
வலியில் ஒடுங்கிய அதன் கண்களை
பலமுறை அவள் கனவுகளில் கண்டிருக்கிறாள்.
தான் சாகப் போவதில்லை என்று அவளுக்கு உறுதியாக தோன்றியது.

O

அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார்.
முன்பிற்கு இப்போது பரவாயில்லை.
ஆனால் மாத்திரைகளின் பாரம்தான் தாங்க முடியவில்லை.
வலுக் கூடிய மாத்திரைகள்.
அவை உடலுக்குள் புகுந்து என்னவோ செய்கின்றன.
உடலில் பலம் இருப்பது மாதிரியே தெரியவில்லை.
சமயங்களில் கை கால்களைக் கூட அசைக்க முடிவதில்லை.
அடிக்கடி தலை சுழற்றிக் கொண்டே வருகிறது.
இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்கிற அளவிற்கு மாத்திரைகள்.
வெவ்வேறு நிறங்களில்.
கூடுதலாக ஊசிகள் வேறு. கைகளிலும் இடுப்பிலும்.
அது வேறு சில நேரங்களில் வீக்கமாகிவிடுகிறது.
ஆஸ்பத்திரியில் தனித்து இருக்கும்போது
அவருக்கு பல ஞாபகங்கள் வருகின்றன.
நீண்ட வருடங்களுக்கு முன் பார்த்த அழகிய பெண் முகங்கள்.
யாருடனோ புரிந்த விவாதங்கள்.
இழந்த நட்புகள்.
இழந்த பணம்.
ஒவ்வொரு நினைவுக்கு பின்னும்
ஆறாத ரணம் போன்ற ஒரு இழப்பு இருக்கிறது
முதுகில் வலித்தது.
உடலை அசைத்துக் கொடுக்கவும்
கை நரம்பில் குத்தி பொருத்தப்பட்டிருந்த
ட்ரிப்ஸ் குழாயில் மருந்து வருவது நின்று
ரத்தம் ஏறத் தொடங்கியிருந்தது.
நினைவுகள் எல்லாம் கழன்று போக
செவிலி எங்கே என்று தேட ஆரம்பித்தார்.