1.
புல்தரையினில் தேங்கி நிற்கும் நீர்நிலை
பூலோக வரைபடத்தின் ஏதோவொரு பெருநிலத்தின்
வடிவத்தை ஒத்து இருந்தது
அருகிலிருந்த நிலத்தின் பனை மரங்களை பிரதிபலித்தபடியே
சட்டென வினவியது ஒன்று
பனைமரங்கள் மிகுந்த புலம் எதுவோ.....
அதில் தோன்றியிருந்த மீன்குஞ்சுகள்
பனைமட்டைகளை கலைத்து விளையாடின
திடம் யாவும் நீர்போல அதிர்வலைந்து கொண்டிருந்தது
பனையில் வாழ்ந்து வந்த காகம் ஒன்று
வீட்டை காலி செய்தது வீடடையும்போது
குஞ்சொன்று அந்த நீரில் தத்தளிப்பதையும்
மீன்கள் அதை தின்பதையும் கண்டுவிட்டபொழுது........
வறண்டுவிட்ட கோடையில் மரம் தின்ற குட்டையின்
தடத்தில் எடையற்ற நண்டின் உயிர்ப்பில்லாத ஓடு
தும்பி உட்கார்ந்த புல்லின் நுனியை அழுந்தியபடியே....
2.
நார்த்தாமலைக்காடுகளில் ஒருவன்
உலாத்தி வருகிறான். வெளியூரான்
அடிவாரத் தேநீர்க்கடையில் குன்றுகளின்
அதனதன் பெயர்களை வினவி வந்திருந்தான்
உசிலைக்காடுகளில் பின் ஓடிவரும் குரங்குகளைக்
கண்டு மருண்டு விலகினான்
சில் வண்டுகள் கதறிக்கொண்டிருந்தன.
ஞாபகம் வந்தவனாக இளம் உசிலை மரத்தினருகே
சிறுநீர் கழிக்க குத்தவைத்தான்
மரங்களடர்ந்த அந்நிலம் உசிலையின்
கதகதப்பான மணத்தை வீசிக்கொண்டிருந்தது
அவ்வமர்வில் அவனது பார்வையில் மயில்கள் சில
உள்ளே மேய்ந்துகொண்டிருந்தன.
கால் அடி நிலம் அவனது கழிவை உறிஞ்சியபடியிருக்க
கொர் என்ற நுரைத்த நீரின் சப்தம் உணர்ந்த வண்டுகள்
கப்சிப் ஆயின
பாறையொன்றில் ஏறி அமர்ந்தவனின் பார்வையில்
இப்போது தெளிவாக நின்றன மயில்கள்
சிற்றுந்து போகும் சப்தம் கேட்டு அத்திசையை
சாலையை ஊகிக்கத் திரும்பினான்
கீழே கேட்டு வந்திருந்த கண்ணெதிரே திரண்டு நிற்கும்
இந்த குன்றினை அவன்
ஆளுருட்டி மலை
என்பதை இறுத்திக்கொண்டவனாக
ஏதோ அவசரம் காட்டுபவனாக எழுந்தவன்
மயில்கள் கத்துவதெப்போது
என்று எரிச்சலுற்றான்
அகவுதலை அவன் மறுதலித்திருந்தான்
குண்டிமண் தட்டியவன் அக்குன்றினை
நெருங்கிக் கொண்டிருந்தான்
சிலோன் போகும் விமானத்தையும் அருகில்
ஊரும் சூரியனையும் கவனித்தவனின் கடிகாரம்
அருகிலிருந்த சிறுகல்லில் வெய்யில் காய்ந்திருந்தது
மற்றும் உடைகளும் செல்பேசியும்
விமானம் பறந்த திசையின் எதிர்த்திசையில்
கழுகுகள் சில வட்டமடித்தன
மாறாக சூரியன் மேற்கே நகர்ந்திருந்தது.