*இயல் என்பது இயலாமை* - சிவாஜிசங்கர்


 (மதுவின் “கால்களுக்கு” முத்தம்)


||
==
||
||
இடப்புறம் இல்லாத சிலுவையை
இடப்புறம் ஊன்றி நடக்கிறேன்.
வலப்புறம் வா,

இடக்கரம் தா.!

*
||
==
||
||
எனது இடப்புறத்தையும்
உனது  வலப்புறத்தையும்
நனைத்தது அம்மழை.!


*

உன்னை கடந்து செல்கையில்
மிடுக்காக நடந்து செல்கிறேன்,

ஒரு போர்வீரனைப்போல் கம்பீரமாக,

ஒரு நடனக்கலைஞனைப்போல் நளினமாக,

பார்த்தாயா.?
பார்த்தாயா.?

நான் நொண்டுவதேயில்லை…
பார்த்தாயா…?

*
அது ஒரு நல்ல உணர்வு.
அதை நீ உணர வாய்ப்பில்லை.

அது அதிஅற்புதமான நிகழ்வு..
அதை பற்றி உனக்கு ஒரு எளவும் தெரியாது..

அது.
அது..
அது...

காலிப்பர் துளைகளுக்குள் காற்று செல்வதைப்போன்றது.

*
கூட்டம் மிகுந்த மாநகர் பேருந்தில்
மாற்றுத்திறனாளி இருக்கையை மறுதலித்து,
நின்று கொண்டே வந்தேன்..
                                        (                )    
அப்போதெனக்கு கொம்புகளிருந்தது.!

*
நடைவண்டி பழகா பால்யத்தை,
ஊஞ்சல் ஆடா பால்யத்தை,
கிட்டிப்புள் விளையாடா பால்யத்தை,
கிரிக்கெட்டில் ஓடா பால்யத்தை,
மிதிவண்டி ஒட்டா பால்யத்தை,
தீயிட்டு கொளுத்தலாம்..

காறி உமிழ்ந்தபடி,
நெருப்பை அள்ளி நிழல் மீது கொட்டினேன்.,

பயந்த நிழல்-என் முதுகின் பின்னால் ஒளிந்துகொண்டது.

நிழல்  எரிவதில்லை,

நெருப்பின் நிழல் நடனமாடுகிறது
துறவியின் துவராடை ஆடுவதைப்போல

பயந்தாங்கொள்ளி பக்கடா....
பருப்பு சட்டிய நக்கடா....
பயந்தாங்கொள்ளி பக்கடா...
பருப்பு சட்டிய...

பால்யம் பரிகசிக்கிறது..


||   (crutches- இடப்புறம்
இல்லாத சிலுவை எனக்கொள்க)
குறிப்பு: கால்கள் என்பது ஆர்.அபிலாஷ் எழுதிய நாவல். இதன் பிரதான பாத்திரமே இக்கவிதையில் குறிப்பிடப்படும் மது