"இரவைப் பருகும் பறவை" வாழ்வோடு கலந்த உறவுகளைப் பதிவு செய்திருக்கிறது. "ஒரு துளி துயரம்"
கவிதை விரிசல் விழுந்து மீட்டெடுக்க
முடியா உறவுகளை சித்தரிக்கிறது. அதோடு உறவுகளில் கலந்த அன்பின் நெருக்கத்தையும் வாசக மனதில் ஆழப் பதித்து நினைவுகளில் ஒருவித நறுமணத்தை அழகாய் கிளறுகிறது.
ஒட்டி
உறவாடும் ரத்த உறவுகளில் கூட பிரியம் சிறிது சிறிதாய் உதிரவே
செய்கிறது. கால நகர்தலில் விரிசல் என்கிற எண்ணம் இல்லையோ என... "உதிர்ப் பிரியம்" கவிதை உணர்த்துகிறது. எதையுமே பார்த்தவுடனே அல்லது கேட்டவுடன் நம்பிவிடக்
கூடாதென கூறும் "பிழைக்காட்சி" கவிதை மனதுக்குள் வாசித்த பின்னும் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. “பட்டகாலிலே படும்”, "கூடவே
வரும் கோடை", கவிதைகள் சிறப்பானவை. நல்லவற்றை
பிறரிடம் சொன்னால் கூட வேண்டாதவற்றை உன்னிடமே சொல்லி விடுகிறாள் "நான் சாமானியள்" கவிதையின் நல்மனதுக்கு சொந்தக்காரி; மனதில் பூத்துக் குலுங்குகிறாள். அதுபோலவே "மழை சென்ற பின்னே" கவிதையும், கொடுத்தது மறு கை அறியாது மழை சென்றிருந்த போதிலும் ஈரம் மனம் விட்டு நீங்காமலே கிடக்கிறது. "கடல் கொண்ட துளி" கவிதை எல்லோரிடத்திலும் ஒரு
தனித்துவம் இருக்கிறதை உணர்த்துகிறது.
"மீன் குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும்" கவிதை, பெண் என்கிற மீன்... சீதனம் என்ற நீரை கூடவே கொண்டு
செல்கிறதை சொல்கிறது. மாற்று நீரில் கலந்து பிடித்தோ பிடிக்காமலோ மெல்ல மெல்ல பழகிக் கொள்கிறது
அம்மீன். “நிகழ்வின் பின்...” கவிதை அழியும் காகிதம் பூவாய் மலர்வதையும், கண்ணாடியில் பூக்களாய் பூத்திருக்கும் மழை துளிகள்.. சற்று நேரத்தில்
அழிந்தாலும் தனிமையில்
இன்னும் அழகாய் பல நியாபகங்களை சுமந்து வருகிறதையும்
சித்தரிக்கிறது. நமது கண் முன்னே
நிகழும் இயற்கை அழிந்துகொண்டிருப்பதை ”மலையின் கதை”
உணர்த்துகிறது. இப்படியாய்
பல கவிதைகள் பல்வேறு நிகழ்வுகளை சுமந்து நிற்கின்றன.
மொத்தத்தில் லாவண்யா சுந்தரராஜனின் "இரவைப் பருகும் பறவை" நம்மைச் சுற்றியும் உள்ளேயும் நடக்கும் சம்பவங்கள் சாதாரண வார்த்தைகளால் கண்சிமிட்டிக் கொண்டே பல வெளிகளை திறந்துவிடுகிறது போலவே,
மொழியால் இன்னும் தூசு தட்டி இருந்தால் இன்னும்
மிளிர்ந்திருக்குமென உணர்கிறேன்.
ரோஸ் ஆன்றா ஒரு அறிமுகம்