வெயிலின் கதைகள் (1) - லஷ்மி மணிவண்ணன்



1.    விளையாட்டு மைதானத்தில் ஒதுங்கிக் கிடக்கும்
ஒரு பக்கக் கால்கள் மண்ணில் இறங்கியிருக்கும்
சிமெண்ட் பெஞ்ச்
கூக்குரல்களுக்கு மத்தியில் தனித்திருக்கிறது
தன்னைப் பற்றி மட்டும் யோசிக்கும் களைப்பில்
கூக்குரல்கள் ஓங்கி தூசுப்படலம் எழும்போது
எழுந்து ஓடிவிடவேண்டும் எனும் எண்ணம் தான்
ஒரு பக்கக் கால்கள் மண்ணில் புதையுண்ட பின்
எண்ணம் எப்போது நிறைவேறும்?



2.    சுற்றி புற்களின் புதர்
வேம்பின் நிழல்
முன்பு மரணப்படுக்கையிலிருந்த முதியவர்
மதிய வெயிலில் வந்து உட்கார்ந்திருப்பார்
வெயிலோடு பேசிக் கொண்டிருக்கும் அவர்
இப்போதெல்லாம் நள்ளிரவுப்
பின் பனியில் வந்து அமர்ந்து கொள்கிறார்
வந்து அமர்பவர்களின் பொழுதுகளையே தேர்வு
செய்து கொள்கிறது அது.