லஷ்மி மணிவண்ணன் தொண்ணூறுகளில் தோன்றிய முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1969இல்
குமரி மாவட்டம் பன்ங்கொட்டான் விளையில் பிறந்தார். அவர் நாகர்கோயில் கலை இலக்கிய
பெருமன்றத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் வழி தீவிர இலக்கிய அறிமுகம்
பெறுகிறார். சுந்தர ராமசாமியின் பரிச்சயமும் உரையாடலும் அவரது அடுத்த கட்ட
நகர்வுக்கு உதவுகிறது.
லஷ்மி மணிவண்ணன் கலக்க்கார பிம்பம் கொண்டவர். தனித்துவமான
நம்பிக்கைகளும், பாணியும் கொண்டவர். லஷ்மி மணிவண்ணன் யவனிகா ஸ்ரீராமுடன் ஒப்பிடத்
தக்கவர். இருவரின் கவிதைகளும் சர்வதேச அரசியலின் புள்ளியைத் தொடுவதன் மூலம் ஒரு
அபாரமான விரிவைப் பெறுகின்றன. லஷ்மி மணிவண்ணனின் எழுத்தில் உள்ள அடாவடித்தன்மையை விலக்கி
நோக்கினால் சுந்தர ராமசாமியின் தாக்கம் இன்றும் துலக்கமாக தெரியும். குறிப்பாய்
தனிமனிதனுக்கும் சமூகத்துமான உறவு, சமூகம் ஒரு அதிகார அமைப்பாய் மாறி தனிமனிதனை
கட்டுப்படுத்தும் வழிகள் ஆகியன குறித்த விவாதம், சித்தரிப்புகளை சுந்தரராமி
மற்றும் மணிவண்ணனின் கவிதை மற்றும் புனைவுகளில் நம் காணலாம்.
“சமூகம் எனும் அதிகார அமைப்பு” என்பது தான் மணிவண்ணன் படைப்புகளின் பொதுவான
கருப்பொருள். சுந்தர ராமசாமியிடம் போன்றே அவரிடமும் அப்பா, குடும்பம், வீடு போன்ற
விசயங்கள் அதிகார அமைப்பின் குறியீடுகளாக மாறுகின்றனர். அதனாலே “சங்கருக்கு கதவற்ற
வீடு”, “அப்பாவை புனிதப்படுத்துதல்” என தன் கவிதைத் தொகுப்புகளுக்கு
பெயரிடுகிறார். இந்த அர்த்த்தில் ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்திரனை விட சுந்தர
ராமசாமிக்கு ஒரு ’இலக்கிய மகனாக’ இன்றளவும் இருப்பது லஷ்மி மணிவண்ணன் தான்.
லஷ்மி மணிவண்ணனின் வலுவான நம்பிக்கைகள் மற்றும் தனித்துவமான ஸ்டைல்
காரணமாக அவரது கட்டுரைகள் மிகவும் சுவையானவையாக கூர்மையானவையாக உள்ளன. அவர் தன்
நூல்களுக்கு எழுதும் முன்னுரைகள் மற்றும் அமிர்தா போன்ற இலக்கிய பத்திரிகைளில்
எழுதிய பத்திகளில் உள்ள தயக்கமற்ற பகடி மற்றும் வாரியடிக்கும் நக்கல் அவரை ஒரு
பிரபலமான கட்டுரையாளராகவும் மாற்றியது. “குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு
கடவுள்” இவரது முக்கியமான கட்டுரை நூல் (அமிர்தா வெளியீடு). இதில் பெரும் அமைப்புகள்
தம் அதிகாரத்தை நம் மீது நேரடியாக செலுத்தாமல் சிறுகுழுக்கள் மற்றும் எளிய
மனிதர்கள் வழி செலுத்துகிறது என்கிற வித்தியாசமான பார்வையை முன்வைத்திருப்பார்.
உயிர்மை வெளியீடான “வெள்ளைப்பல்லி விவகாரம்” சமூகத்தை ஒரு பைத்திய
விடுதியாக சித்தரித்து, இன்று மனிதனுக்கு தன் எதிரிகள் நிஜத்தில் இல்லாமல் வெறும் பிம்பங்களாக
மட்டுமே உள்ள அபத்த்த்தை பேசும் முக்கியமான நாவல். வெறும் தோற்றமாக மட்டுமே உள்ள
எதிரியை எப்படி கொல்வது என்பதே இந்நாவலின் பிரதான பாத்திரத்தின் பிரச்சனை.
லஷ்மி மணிவண்ணனின் வேறு நூல்கள்
·
36
கி பள்ளம் (சிறுகதைகள்),
·
அப்பாவின் வீட்டில்
நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் (நாவல்),
·
வீரலட்சுமி (கவிதைகள்),
·
எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் (கவிதைகள்),
·
சித்திரக்கூடம் (சிறுகதைகளும் நெடுங்கதைகளும்),