மனுஷ்யபுத்திரனுடன் ஒரு உரையாடல்: கலகவாதிகளும், எதிர்கலாச்சாரவாதிகளும்




மனுஷ்யபுத்திரன் தன் கணிசமான பேட்டிகளில் பல பரபரப்பான பதில்களை கூறியிருக்கிறார். சாமர்த்தியமாக நக்கலாக கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்த மிகவும் தயங்குபவராக இருந்திருக்கிறார். ஆனால் இலக்கியம், எழுத்தாளர்கள், விழுமியங்கள், அதன் பின் உள்ள உளவியல் பற்றி சுவாரஸ்யமாக இன்மை.காமுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் முதல் பகுதி இது.




ஆர்.அபிலாஷ்: தமிழில் சிறுபத்திரிகை வட்டங்களில் நமக்கு மரபையும், சமூக நெறிகளையும் எதிர்த்து கலகம் செய்யும் எழுத்தாளர்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஜி.நாகராஜன், கோணங்கி, விக்கிரமாதித்யன் ஆகியவர்களை சொல்லலாம். அவர்களின் எழுத்தை படிக்காதவர்கள் கூட பிம்பத்தை வழிபடுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

மனுஷ்யபுத்திரன்: இலக்கியத்துக்கு பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்டு ஒரு புனிதம் இருக்கிறது என்கிற ஒரு லட்சியவாதத்தை இவர்கள் நம்புகிறார்கள். இலக்கியம் தூய்மையானது என்கிற ஒரு மரபும் நமக்கு உண்டு. மேலும் இங்குள்ள வணிகரீதியான கலைகள் உருவாக்குகிற ஒரு அலுப்பும் இதற்கு வழிவகுக்கிறது. இவை முழுக்க வாழ்க்கையில் இருந்து விலகி, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன, கலாச்சார சீரழிவை நியாயப்படுத்துகின்றன. இதற்கு நம் தீவிர எழுத்தாளர்களில் சிலர் ஒரு வகையாக எதிர்வினையாற்றுகிறார்கள். சமூகம் தமக்கு அளிக்கும் எல்லா வசதிகளையும் மறுக்கிறார்கள். ஒரு வணிக கலைஞனின் வாழ்க்கை வெளிச்சமாய் இருந்தால் இவன் தன் வாழ்வை இருட்டாக வைத்துக் கொள்கிறான். ஒரு வணிக எழுத்தாளன் பணக்காரனாய் வாழ, இவன் தன்னை ஏழையாக்கி கொள்கிறான். வணிக எழுத்து மக்களுக்கு சுலபத்தில் புரியும். ஏனென்றால் அது மேலோட்டமானது. ஆனால் தூய இலக்கியம் ஆழமானது, அதனால் அது புரியும்படியாய் இருக்காது. இப்படி எல்லா நிலைகளிலும் அவன் ஒரு எதிர்நிலையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். இதன் நீட்சியாக அவன் வீழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கிறான். வெகுஜன பத்திரிகைகளை எதிர்க்கிறான். வெற்றிபெற்ற எழுத்தாளனை எதிர்க்கிறான். வெகுஜன ஊடகங்கள் முன்வைக்கக் கூடிய விசயங்களை எதிர்க்கிறான்
.

ஆர்.அபிலாஷ்: இங்கு குறுக்கிட்டு இன்னொரு கேள்வி கேட்கிறேன். அசோகமித்திரனின் பிம்பம் மட்டும் வேறாக இருக்கிறது. அசோகமித்திரனும் இந்த கலகக்கார எழுத்தாளர்களைப் போல் ஒரு கட்டத்தில் தன் வேலையை விடுகிறார். கடும் வறுமையுடன் போராடுகிறார். ஆனால் அவர் வறுமையுடன் போராடின ஒரு சித்திரம் நம் மனதில் ஏதோ ஒரு காரணத்தினால் இல்லை. அவர் இவர்களுக்கு சம்மந்தமில்லாமல் இன்னொரு அடுக்கில் இருக்கிறார். வாழ்வை பாதுகாப்பாக வாழ்ந்தவராக பார்க்கப்படுகிறார். ஏன்?
மனுஷ்யபுத்திரன்: ஏனென்றால் அசோகமித்திரனின் வறுமையை நீங்கள் கொண்டாட பண்ண முடியாது. அதை மிகைப்படுத்தி நாடகப்படுத்த (dramatize) முடியாது – அப்படியான வறுமை அல்ல அது. ஜி.நாகராஜன் ரோட்டில் கிடந்தார். குடித்து குடித்து அழுது போனார். தேவடியா வீட்டுக்கு போனார். நகுலன் பைத்தியமானார். இவர்கள் எல்லோரும் அப்நார்மல். ஆனால் அசோகமித்திரன் ஒரு நார்மலான எதார்த்தமான கதையை எழுதக் கூடியவர்.

ஆர்.அபிலாஷ்: குடும்பஸ்தராகவும் இருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன்: ஆம், அவருடைய வறுமை ஒரு மத்தியவர்க்க ஆளுடைய வறுமை. ஒரு தீவிர மனதின் வறுமையோ, ஒரு deviate (பிறழ்வான) ஆனவருடைய வறுமை கிடையாது. இவர்களுக்கு வறுமை அல்ல பிரச்சனை. Deviation (பிறழ்வு) தான் பிரச்சனை. சமூகத்தின் நெறிகளில் இருந்து நீங்கள் பிறழ வேண்டும். அதன் கட்டமைப்பில் இருந்து பிறழ வேண்டும். இன்னும் சொல்லப் போனால் சமூகத்தில் என்னவெல்லாம் சகஜமாக நடக்கிறதோ அதில் இருந்தெல்லாம் பிறழ வேண்டும். இந்த பிறழ்வு தான் அவர்களுக்கு ஈர்ப்பு. இதன் வழியாகத் தான் கலை உருவாகும் என்று நம்புகிறார்கள். சமூகத்தில் ஏற்கனவே உருவான பிரபல கலைவடிவங்களில் இருந்து பிறழ்வது தான் தீவிரமான கலை என்று இவர்கள் நம்புகிறார்கள்.
கலை பிறழ்வானது என்றால் கலைஞனும் அப்படித் தானே இருக்க வேண்டும்.
இவர்களைப் பொறுத்த வரையில் சிறுபத்திரிகை கலாச்சாரம் என்பது மையநீரோட்ட அமைப்பில் இருந்து ஏற்படுகிற பிறழ்வு தான். கோணங்கியின் விசயத்தில் இது தான் நடக்கிறது. அவரது எழுத்து மட்டும் இவர்களுக்கு முக்கியம் கிடையாது. அவருடைய வாழ்க்கைமுறையும் மிக முக்கியம். அவர் ஒரு அலுவலகத்தின் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றினால் இப்போது அவரை வழிபடுபவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். 

ஆர்.அபிலாஷ்: ஜி.நாகராஜனில் இருந்து ஆரம்பிக்கிற இந்த எதிர்க்கலாச்சார மரபு விக்கிரமாதித்யன், கோணங்கி என நீண்டு இப்போது லஷ்மி மணிவண்ணன் மற்றும் சிலருடன் வந்து நிற்கிறது. இப்படி ஒரு தொடர்ச்சி இங்கு உள்ளது அல்லவா?

மனுஷ்யபுத்திரன்: தொடர்ச்சி என்பதை விட இவர்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என சொல்லலாம். வாசகர்களுக்கு தங்களுடைய வெறுமையை நியாயப்படுத்த ஒரு கடவுள் தேவைப்படுகிறார். இளம் எழுத்தாளர்களுக்கு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்தவும், அதை நியாயப்படுத்தவும் முன்னோடிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால் பிறழ்வை ஒரு வாழ்க்கை முறையாக நாம் பார்க்க முடியாது.
பிறழ்வுக்கு ஒரு அழகு உண்டு. ஆனால் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல அது. நகுலனோட வாழ்க்கை நகுலனுக்கு மட்டுமே சொந்தமானது. 

ஜி.நாகராஜனுடைய வாழ்க்கை அவருக்கு மட்டுமே சொந்தமானது. நீங்கள் எப்போதுமே ஒரு லட்சியபூர்வமான நபர்களை தான் பின்பற்ற முடியும். பிறழ்வை நீங்கள் பின்பற்றவே முடியாது.

ஆர்.அபிலாஷ்: இங்கு இன்னொரு கேள்வி வருகிறது. மேற்கில் இது போல் ஒரு எதிர்கலாச்சார மரபு உள்ளது. புக்காவஸ்கியை போன்று சமூக நெறிகளை தொடர்ந்து மறுத்து, சமூகத்தின் பண்பாட்டு விளிம்பில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குடியையும் சீரழிவையும் விபச்சாரிகளை பற்றி பிரதானமாய் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் நம் தமிழ் எதிர்கலாச்சாரவாதிகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. புக்காவஸ்கிக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையோ லட்சியவாதமோ இல்லை. சமூகத்தை எதிர்ப்பதை ஒரு லட்சியமாக அவர் நினைப்பது இல்லை. வாழ்க்கை அர்த்தமற்றது, வெறுமையானது என்றே அவர் படைப்புக்ள் மீள மீள சொல்கின்றன. ஆனால் நம் எதிர்க்கலாச்சார எழுத்தாளர்கள் ஒரு லட்சியவாதத்துடன் இருக்கிறார்கள். எதிர்ப்பு சார்ந்த தூய இலக்கியம், கலக பிம்பம் ஆகியவற்றை கொண்டாடுகிறார்கள், வாழ்க்கையின் அர்த்தமாக லட்சியமாக இவற்றை பார்க்கிறார்கள். நம் எதிர்க்கலாச்சார எழுத்தாளர்கள் பழங்கால சித்தர்களை போன்றவர்கள். வாழ்க்கையை, சுகங்கள், பெண்களை பழித்து மறுத்தாலும் இன்னொரு புறம் கடவுளில் போய் சரணாகதி அடைவார்கள். ஒரு புறம் வாழ்க்கையை எதிர்த்தபடியே இன்னொரு புள்ளியில் எதிர்ப்பு வாழ்க்கையை glorify செய்யவும் தலைப்படுகிறார்கள். வாழ்க்கையில் ஏதோ சில விழுமியங்களை நம்புகிறார்கள். மேற்கத்திய எழுத்தாளனைப் போல் விழுமியங்களே இல்லை என கூறவில்லை. சரியா?

மனுஷ்யபுத்திரன்: இவர்கள் தம் சொந்த வாழ்க்கையின் தோல்வியை லட்சியப்படுத்துகிறார்கள். அதற்கொரு இலக்கிய மதிப்பை உருவாக்குகிறார்கள். உதாரணமாய், இவர்களால் வேலைக்கு போக முடியாது, அங்கு போய் மனப்பூர்வமாய் பணி செய்ய முடியாது. தங்களுடைய நேரத்தை வேறுவிதமாய் செலவு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இதை சமூகமோ குடும்பமோ ஏற்றுக் கொள்ளாது. இதனால் இவர்கள் தம் இயலமையை ஒரு லட்சியமாக மாற்றுகிறார்கள். இதற்கு ஒரு சமூக நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிராய் போராடுகிறோம், நாங்கள் சமூகத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள்.

 தங்களைத் தாங்களே நியாயப்படுத்த ஒரு எதிர்க்கலாச்சார பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
ஆனால் நிஜ வாழ்வில் இப்படி ஒன்றுமே இல்லை. இவர்களும் மனதின் அடியாழத்தில் பணததுக்காக, அதிகாரத்துக்காக ஒரு ஏக்கத்தோடு தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை அடைவதற்கான விசயங்களை செய்ய தயாராவதில்லை. ஆனால் உண்மையான பிறழ்வு நிலை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப நேர்மையாக எழுத்தில் வேலை செய்திருக்கிறார்கள். நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால் வேறு பலரின் எதிர்க்கலாச்சாரம் உள்ளடக்கமே இல்லாத ஒரு லட்சியவாதம் மட்டுமே.

வாசகர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சமூக நடைமுறைக்கு அடங்கி வாழ்பவர்கள். அவர்களுக்கு தம்மால் செய்ய முடியாததை செய்கிற, அத்தனை நெறிகளையும் மீறிப் போகிற எழுத்தாளர்கள் மீது ஒரு பெரிய ஈர்ப்பு வருகிறது. வெகுஜன பரப்பில் மத்தியவர்க்க மக்களுக்கு ஜெயகாந்தன் மீதான பிம்பம் அப்படி உருவானதே.
ஜி.நாகராஜனை வழிபடுபவனோ ஜெயகாந்தனை வழிபடுபவனோ வெவ்வேறு சமூகக் குழுவை சேர்ந்தவனாக இருக்கலாம். ஆனால் இருவரின் ஆழத்தில் உள்ள மனோபாவம் ஒன்று தான்.
ஜி.நாகராஜன் தன் வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தார் என நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். நகுலன் தன் மனப்பிறழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டார் என சொல்லவே மாட்டேன். அவர்களின் வாழ்க்கைப் பாதையில் அவர்கள் போய் சேர்ந்த இடம் அது. அந்த வாழ்க்கையை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கவில்லை.