வாசற் துவாரத்திற்கு வெளியே - பொன்.வாசுதேவன்


உனக்கொரு வாழ்க்கை இருக்கிறதா
நீ வாழ்வது உன் வாழ்க்கைதானா
போர்வையை உதறியதும்
ஒவ்வொன்றாய்ச் சிதறுகின்றன வார்த்தைகள்

வெண்படலம் போன்ற வெளி கண்டு
விடிந்தது எனத் தெரிகிறது
எப்படி விடிந்தது

இதற்கெல்லாம் நீ பழகி விட்டாய்
எல்லோரும் எல்லாவற்றுக்கும் பழகி விடுகிறோம்
தவிக்கிற நுங்கு உதடுகள் பசியில் தவித்து
முலைக்காம்பைத் தேடிப் பற்றிக் கொள்வது போலத்தான்
பகட்டில்லாதது அது

உடைகளைக் களைவது போல
எளிதாயில்லை பழக்கங்களிலிருந்து விடுபடுவது

வாசற் துவாரத்தின் வழியே வெளியே சென்றால்
பேருலகம் காத்திருக்கிறது


நீ சிரிக்கிறாய்
பொய்யாய்ச் சிரிக்கிறாய்
எஜமானனிடம் சிரிக்கிறாய்
காரியம் ஆக வேண்டுமென்று
நட்பு என்று நினைத்துச் சிரிக்கிறாய்
காதலென்று சிரிக்கிறாய்
சிரித்துக் கொண்டேயிருக்கிறாய்
சிரிப்பின் பாவனையை உன்னால்
கைவிட முடிவதில்லை

பொழுதின் கூடவே எல்லாம் முடிகிறது
இருண்ட வாசற் துவாரம் மீண்டும் வரவேற்கிறது
கூடடைகிறாய்
குஞ்சுகளைக் கொஞ்சுகிறாய்
கொண்டு வந்ததைப் பகிர்கிறாய்
உன் மூர்க்கமனைத்தையும் படுக்கையில் கிடத்தி
விட்டத்தை வெறிக்கத் தொடங்குகிறாய்

இருளை வெட்டியபடி சுழலும் மின்காற்றாடியாக
காலம் உன்னை அடுத்த பொழுதுக்கு
தள்ளிச் செல்கிறது
உறக்கத்தில் அமிழ்ந்து கனவுகளில் பெருகி
உன் வாழ்க்கையை நீ வாழத்துவங்குகிறாய்.


கவிஞர் பொன்.வாசுதேவன் ஒரு அறிமுகம்