கிளையிலமர்ந்து சிறகை உலர்த்தினாய்
மொத்த நிழலையுமெடுத்து
பூ வாசங்களிலும் படுத்துறங்கி
இலைமறைவில் கூடும் கட்டிக் கொண்டாய்
முட்டையிட்டு அடைகாத்து
குஞ்சு பொரித்து குடும்பம் நடத்தினாய்
சேர்ந்து கூச்சலிட்டாய்
கனிகளை
குஞ்சுகளுக்கும் உண்ணக் கொடுத்து
போதாதென
என் மேனியெங்கும்
நிழல் பரந்த தரையெங்கும்
எச்சமிட்டு அசுத்தமாக்கினாய்
எல்லாவற்றிற்கும் திட்டியிருக்கிறேன்
கோபத்தோடு சபித்துமிருக்கிறேன்
இப்போது சங்கடமாயிருக்கிறது
வெட்டுக்காரன்
சுற்றிப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறான்.