இந்த இதழ் இன்மையின் வாசகர் கடிதங்கள்
பகுதிக்கு ஒரு வாசகர் ஒரு முக்கியமான கேள்வியை அனுப்பி இருக்கிறார். இன்மையில் உள்ள
கவிதைகள் புரியவில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார். நியாயமான புகார் எனத் தான்
நினைக்கிறேன். எந்த படைப்பும் புரிவதற்காகத் தான் எழுதப்படுகிறது. ஆனால் ஒரு அழகான
பெண் பர்தா அணிவது போல் சிலவேளை கவிதைக்கு கொஞ்சம் பூடகம் அல்லது புதிர்தன்மை தேவைப்படுகிறது.
இன்னொரு காரணம் கவிதை மிக மிக செறிவானது. அரேபிய இரவுகளில் வருகிற குடுவைக்குள் அடைபட்ட
ஜின்னைப் போன்றது. ஒன்றை சுருக்கி வடிகட்டி முடுக்கி முடுக்கி எழுதும் போது அது சிலவேளை
புரியாமல் போகிறது. நன்றாக எழுதப்பட்ட ஆனால் கொஞ்சம் புதிராக இருக்கிற கவிதைகளை சொல்கிறேன்.
ஆக இப்படியான கவிதைகளை திறக்க உங்கள் கைவசம் ஒரு
சாவியோ அல்லது ஏதோ ஒரு வித்தையோ தேவையாக இருக்கிறது. துரதிஷ்டவசமாக எப்படி கவிதை வாசிப்பது
என்பது பற்றி அதிகம் புத்தகங்களோ கட்டுரைகளோ இல்லை. ஜெயமோகனின் ”தேவதேவனை முன்வைத்து”
ஒரு நல்ல புத்தகம். அதை வாசிக்கலாம். ஆனால் நமக்கு அது போல் பல நல்ல எளிய அறிமுக கட்டுரைகள்
தேவைப்படுகின்றன.
நீங்கள் ஒரு கல்லூரியில் இலக்கியம்
படித்தால் கவிதையின் உறுப்புகள் என்ன, வழக்கமான குறியீடுகள், உருவகங்கள் என்னென்ன,
படிமம் என்றால் என்ன என்பது பற்றி வகுப்பில் சொல்லித் தருவார்கள். இது போன்ற அறிமுகங்கள்
நமக்கும் தேவையுள்ளன. எப்படி தமிழ் சினிமா தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு பாதியில் ஒரு
படத்தை பார்த்தால் கூட கதை புரியுமோ அது போல் கவிதையில் தொழில்நுட்ப பயிற்சி கொண்டோருக்கு
கடைசி சில வரிகளை பார்த்து கூட இது என்ன சொல்லுகிறது என ஊகிக்க முடியும். அதன் சில
அடிப்படைகளை புரிந்து கொண்டால் கவிதையை, சிக்கலான ஒரு கவிதையை கூட, புரிந்து கொள்வது
அவ்வளவு சிரமம் அல்ல. “திருடன் மணியன்பிள்ளை” என்கிற நூலில் மணியன் பிள்ளை சுவாரஸ்யமான
ஒரு விசயம் சொல்கிறான். சில வீட்டு ஜன்னல் கம்பிகள் மிக வலுவாக இருக்கும். ஆனால் எவ்வளவு
வலுவான கம்பிகளையும் அவற்றின் இடையே அதைவிட கனமுள்ள ஒரு இரும்பு கம்பியால் நுழைத்து
ஒரு அழுத்து அழுத்தினால் படக்கென்று வளைந்து விடும். ஒரு திருடனால் உடைக்க முடியாத
வீடே இல்லை என்பார். அது போல் சில எளிய தந்திரங்களை அறிந்த ஒரு வாசகனால் புரிந்து கொள்ள
முடியாத கவிதையும் இல்லை.
தமிழில் நாம் கவிதையை உணர்வு ரீதியாய்
மட்டுமே புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறோம். அப்படியும் வாசிக்கலாம். ஆனால் நமக்கு
உணர்வு ரீதியாய் ஒன்றாத கவிதைகளும் உள்ளனவே! அவற்றை எப்படி படிப்பது? அது போன்று நமக்கு
அந்நியமாய் தோன்றுகிற கவிதைகளை எதிர்கொள்ளும் போது ஒன்று புரியவில்லை என ஏமாற்றமடைகிறோம்.
அதை விட மோசம் இன்னும் சிலர் இக்கவிதைகளை
கடுமையாய் நிராகரிக்கிறோம். எழுத்தின் கருப்பொருள் தான் எழுத்து முறையை தீர்மானிக்கிறது.
ஒரு அரசியல் கவிதைக்கு அரசியல் மொழி இருக்கும்; ஆன்மீகக் கவிதைக்கு பூடக மொழி இருக்கலாம்.
அரசியல் விசயங்களை பிடிக்காதவர்களுக்கு அந்த மொழியில் எழுதப்பட்ட கவிதை என்றாலே ஒவ்வாமையாய்
இருக்கும். அவற்றை படிக்க மாட்டார்க்ள். இவர்களுக்கு நிறைய முன்எண்ணங்கள் கவிதை குறித்து
இருக்கும் – கவிதை என்றால் இப்படி இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பார்கள். தமக்கு
ஒவ்வாதவற்றை மோசமான கவிதை என்பார்கள். இது ஒரு கண்மூடித்தனமான போக்கை உருவாக்குகிறது.
நல்ல சூழல் என்பது பிடிக்கிறதோ இல்லையோ கவிதையை புரிந்து கொள்ள முடிவது. கவிதையில்
உணர்வு மட்டுமல்ல அறிவுக்கான ஒரு இடமும் உள்ளது. அது போல் ஆரம்பநிலை வாசகர்களுக்கு
முக்கியமான கவிதைகளை வாசிக்க சொல்லித் தருகிற முயற்சிகளையும் எழுத்தாளர்கள் மேற்கொள்ள
வேண்டும்.
எழுத்தாளர் முஜீப் ரகுமானுக்கு
சாதிக் எனும் தம்பி இருக்கிறார். நான் சிறுவனாய் இருந்த போது அவர் என் வீட்டுக்கு வருவார்.
என் அலமாரியில் ரெண்டோ மூன்றோ கவிதை நூல்கள் தாம் இருக்கும். “ரெண்டு புத்தகத்தை திரும்ப
திரும்ப படித்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டவர் அவ்வப்போது எனக்கு படிக்க ஒரு
கவிதை நூல் கொண்டு வரத் தொடங்கினார். பசுவய்யாவின் “நடுநிசி நாய்கள்” தான் நான் வாசித்த
முதல் நவீன கவிதை நூல். அதில் உள்ள பல கவிதைகள் எனக்கு மேலே குறிப்பிட்ட வாசகரைப் போல்
புரியவில்லை. சாதிக்கிடம் கேட்டேன். அவர் சில கவிதைகளை விளக்கினார். பின்னர் கலை இலக்கிய
பெருமன்ற உரையாடல்களை கவனித்து நிறைய கற்றுக் கொண்டேன். கல்லூரியில் இலக்கிய வகுப்புகளும்
உதவின. இந்த வாய்ப்புகள் எல்லாருக்கும் இராது. இல்லாதவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
கவிதைகள் குறித்த குருட்டு தீர்மானங்களை உருவாக்காமல் எளிய விஞ்ஞான முறையில் அதை புரிந்து
கொள்ள சொல்லித் தர வேண்டும்.
அதற்கான ஒரு எளிய முயற்சியாக இந்த
இதழுடன் நவீன தமிழ் கவிதையை அறிமுகப்படுத்தும் ஒரு காணொளியை சேர்த்திருக்கிறோம். அதோடு
ஆத்மார்த்தியும் கவிதை பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். சர்வோத்தமன் பிரமிள் கவிதை ஒன்றை
வாழ்க்கையோடு பொருத்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்னும் பலர் நம்மோடு இணைய இருக்கிறார்கள்.
நவீன கவிதைக்குள் ஒரு வெளிச்சம் கொண்டு வருவோம்.
- ஆர்.அபிலாஷ்
- ஆர்.அபிலாஷ்