கவிதையில் தற்கொலை செய்து கொள்பவள் - கல்யாண்ஜி




இந்தக் கவிதையை எழுதுகிறவனைக் கட்டியவள்
என்றேனும் தற்கொலை செய்துகொள்வாளா?
எனில், அதற்கு முன் அவள்
என்ன வகை உணவெடுப்பாள்?
தரித்துள்ள ஆடையில் கடைசி நேர மாற்றங்கள்
ஏதேனும் இருக்குமா?
தன் இறுதி பிம்பம் காட்டும் கண்ணாடியின்
இடவலத்தை அவள் நொறுக்கக் கூடுமா?

அறியமாட்டான் எதுவும்.
அவனுடைய கவிதையில் தற்கொலை செய்து கொள்பவள்
பக்கத்து வீட்டில் உதிர்ந்ததைப் பொறுக்கிய
அரிநெல்லிக்காயை உண்பாள் என்பதும்
புத்தம் புதிய தேர்ந்த உள்ளாடைகளை
அவள் அன்றைக்கு அணிந்தாள் என்றும்
சமையலறைக் கத்திகளில் கூரான ஒன்றை
தலையணைகளில் ஆழச் செருகுவாள் எனவும்
நிச்சயமாக அவனுக்குத் தெரியும்.
மனைவியுடன் வாழ்வதை விடவும்
கவிதையில் சாகிறவள் குறித்து அவன்
கடினமாகத் தன்னைத் தயாரித்துக் கொள்கிறான்.
நீங்கள் இதைப் புரிகிறபோது
தற்கொலை செய்து கொள்கிறவள் பற்றிய
எந்தக் கவிதையையும் உங்களால்
புறக்கணிக்கமுடியாது  ஒருபோதும்.