தொலைக்காட்சி
செய்தி பார்க்கையில்
தோன்றியது
எனக்கு,
ஆட்கொல்லிப்
புலிகளை விடவும்
புலிகொல்லி
ஆட்களே கூடுதல் என்று.
’பூனை மனிதர்கள்’ என்ற சினிமாவை
எர்ணாகுளத்தில்
பார்க்கும்போது,
என்
மூளை அதிகம் பியரில் மிதந்திருந்தது.
பன்னேர்கட்டா
வெயிலில் படுத்திருந்த புலிக்குடும்பம்
அலட்சியக்கண்களால்
எங்கள் வாகனம் பார்த்தது.
புலியைத்
தடவிக்கொடுப்பது போல
புண்டரீக
ராவுடன் நிற்கும் மைசூர் புகைப்படம்
காப்பாற்றப்படாமல்
தொலைந்துவிட்டது.
பொதிகைமலையில்
ஒரு இடம் தாண்டுகையில்
புலி
வீச்சம் அடிக்கிறது என நான் சொன்னதை
யாரும்
சிறிதும் நம்பவில்லை.
பாம்பே
சர்க்கஸ் கூடாரத்தில்
வெற்றுப்
புலிக்கூண்டுப்பக்கம் நான்
நெடுநேரம்
நின்றிருக்கிறேன்.
வினாடி
கூட ஓய்வின்றி
கூண்டின்
கனசெவ்வகத்துக்குள்
கானகம்
தேடிச் சுற்றித் திரும்பும்
கொழுத்த
புலியின் காமம் எனக்குப் புரியும்.
என்னுடைய
அபூர்வக் கனவொன்றில்
மரப்பலகைகளால்
கட்டப்பட்ட வீட்டில்
புலி
ஒன்று உறுமி அலைந்துகொண்டிருந்தது.
பசித்த
புலியின் தாக்குதல் போலொரு
உச்சக்
கலவியை ஒருத்தி தந்திருக்கிறாள்.
ஜிம்கார்பெட்டின்
குமாவும் புலிகள்
அசோகமித்திரனின்
புலிக்கலைஞன்
இப்போதும்
என்னுடன் வரிகளாய் உண்டு.
புலிகள்
கணக்கெடுப்பில் எனக்கு
நம்பிக்கையே
இல்லை.
அவர்கள்
ஒவ்வொரு முறையும்
கூண்டுப்
புலிகளைப்
புள்ளிவிபரத்திலிருந்து
ஒதுக்கிவிடுகிறார்கள்,
என்னையும்
சேர்த்து.