கொல்லிப்பாவை - என்.டி. ராஜ்குமார்



மிருக மொழி தெரியாத எத்துவாலிகளின்
சக்கரவியூகத்தை தகர்க்க வேண்டிய காலம் இது
வனதேவதைகளை வழிபட்டால்
காட்டு விலங்குகள் அழிந்து விடும்

ஆதிகுரங்குகளே
தொலைந்து போய் விடுங்கள் என்கிறான்
தங்கமலைத் திருடன்


கால்நடைகளை மேய்ப்பதும்
நீண்டகால பயிர்செய்வதும்
தவறென்கிறான்

தனது பிட்டத்தை சொறிந்து காட்டுகிறது
குட்டிக் குரங்கொன்று

ஆர்ப்பரிக்கும் கலைமான்களின்
குடில்களைச் சுற்றி சுழன்று வருகிறது
புலிகள் காப்பகம்

மெலிந்த ஏசுவை தூக்கிலேற்றி
கழுத்தில் தொங்க விட்டுத் திரியும் ஊழியன்

தனது துருத்தியை தூக்கிக் கொண்டு
மலையேறுகிறான்

சீறிப் பாய்ந்த குரங்குகளை சிறையில் அடைத்த
காவலர்களின் கைப்பேசியில் இருந்து எழுந்த
மேற்கத்திய வசனம் குலதேவதையின் கன்னத்தை அறைகிறது

சிதறிய கண்ணீர்த் துளிகள் பர்வதமெங்கும்
கொல்லிபாவைகளாய் நிலைகுத்தி நிற்கிறது