ஜன்னலுக்கு வெளியே பெய்யும் சொற்கள் - சுதீர் செந்தில்

1




 ஒரு கணித மேதையிடம் கேளுங்கள்
உலகம் கணிதங்களால் ஆனது என்பார்

ஒரு மருத்துவரிடம் கேளுங்கள்
உலகம் நோய்மையினால் நிறைந்தது என்பார்

ஒரு நடிகரிடம் கேளுங்கள்
கள்ளப்புன்னகையோடு எல்லாம் நடிப்புத்தான் என்பார்

இந்தக் கேள்வியை
எத்துறை வல்லுநர்கள் எதிர்கொண்டாலும்
அவர்களின் கண்களிலிருந்து
சுடரும் விடை
அவர்களின் துறை சார்ந்ததுவென
நீங்கள் அறிந்துகொள்ளும்போது
அலுத்துப் போவீர்கள்


மாறுதலுக்காக
ஓர் எழுத்தாளனிடம் சென்றால்
அவர் கண்களிலிருந்தும் வழிவது எழுத்துகள்தான்
என அறிந்துகொள்வீர்கள்

உங்கள் கோபத்தைக் கண்டு
தடுமாறி விட்டேன்
நான் ஓர் எழுத்தாளன் என்பதால்

2




 
நண்பரே
நானும் ஒருமுறை

எழுத்து நல்லது
பின்பு ஊடலும் நல்லது
உயிர் நல்லது
உயிரைக் காப்பாற்ற எதுவும் நல்லது
கறை நல்லது என்பதுபோல
ஏழை நல்லது
அவர்களைக் காப்பாற்ற செய்யும் எதுவும் நல்லது
புரட்சி நல்லது
என்று புலம்பியபடி சென்றபோது

எதிர்ப்பட்ட கெஜ்ரிவாலிடம்
அவ்வுணர்வுகளை கை மாற்றி விட்டேன்
எதிர்பார்க்கும் தேர்தலைச் சந்திக்க
ஏதோ கேட்டார்
கொடுத்தும் விட்டேன்

அவரும் டங்கு டங்கென்று ஆடிக்கொண்டே
புரட்சி நல்லது புரட்சி நல்லது
என்று பாடிக்கொண்டே சென்றுவிட்டார்.

அப்பாடா என்று ஒரு திண்ணையில் உட்கார்ந்தேன்
தம்பி என்று ஓர் அரவாணி அழைக்க
திரும்பிப் பார்த்தேன்
அது
பழகிய முகமாய் இருந்ததால்
நான் அவனல்ல
என்று சொல்லி விலகிச் சென்றேன்

என் வீடு அமைதியாய்
கதவுகளை சாத்தியபடி இருந்தது
அத்தனை சிறிய வீடு என்றாலும்
காம்பவுன்ட்டும் கதவுகளும் இருந்தன

3
 


துரதிருஷ்டவசமாக
மிகுந்த கலைப்பான ஒரு நாளில்
தாமதமாக நீங்கள் வீடு திரும்புகையில்
உங்கள் வீட்டுக் கதவுகள் திறக்கவில்லை
என்றால்
எவ்வாறு நீங்கள் தவிப்பீர்கள்
என்பதை நான் புரிந்துகொள்கிறேன்

எனக்கும்கூட
அவ்வாறான விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன

இருளின் நிறம் அத்தனை அத்தனை மெருகேறியிருந்த
ஓர் இரவில்
கள்ளக் காதலன் போலவே
வீட்டினுள் நுழைந்தேன்
தடம் தெரிந்த பூனை போலவோ
அல்லது
ஓர் எலியைப் போலவோ

என் படுக்கையறையில் என் மனைவியை காணவில்லை
என்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்ததை
உங்களுக்கு விளக்கத் தேவையில்லை

அவள் ஏதேனும் ஓர் எலிப்பொந்தில் இருக்கலாம்
என்கிற நினைவோடு
அறைகளின்
கதவுகளை இறுக அடைத்தேன்
ஜன்னல்களையும் சாத்தினேன்

தவறுதலாக என் கழிப்பறையின் கதவையோ
அதன் சாளரத்தையோ மூட மறந்தபடி
என் படுக்கையில் வீழ்ந்தேன்

என்னை சுற்றி இருட்டு
என்னுள்ளும் இருட்டு
அப்பொழுது எங்கோ சிறிது வெளிச்சம்
அது என் கழிப்பறைக்குள் இருந்து வந்தது
அந்த வெளிச்சத்தின் கயிற்றைப் பற்றியபடி
நான் முன்னகர்ந்தேன்

என் மூக்கு கழிப்பறை ஜன்னலில் முட்ட
நான் பார்த்தேன்

என் கண்கள் அத்தனை பிரகாசமாய் இருந்ததை
நான் பார்த்தே இல்லை
என் கழிப்பறை ஜன்னலுக்கு வெளியே
என் கவிதையின் சொற்கள் பொழிந்து கொண்டிருக்க
அது
பிரவாகமாய் பெருக்கெடுத்து கடந்துகொண்டிருந்தது
இந்த நிலத்தை

4
 

எதுவும் சரி என்பதை புரிந்துகொள்ளும்போது
எதுவும் சரியில்லை என்பதையும்
புரிந்துகொள்ளவேண்டும்
என்கிற வேண்டுகோளை

எவ்வாறு நிராகரிப்பது
நண்பரே.