என்னருகில் யாருமே இல்லை - மனுஷி






இயேசுவை நம்புங்கள்
அவர் நல்லவர்
என்றது குரல்.
குரல் வந்த திசையைத் தேடினேன்.
அருகில் இருந்தவர்களின் வாய்கள்
மௌனமாகவே இருந்தன.
யாருடைய உதடுகளும் நாவும்
அசையவே இல்லை.
குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் கர்த்தர்
சர்வ வல்லமை படைத்தவர்.
அற்புதங்கள் செய்யும் அவரைத் துதியுங்கள்
என்றது குரல்.
அற்புதங்கள் ஏதும் நிகழ
வாய்ப்பே இல்லையென
தீர்க்கமாய் முடிவு செய்திருந்த தருணம் அது.

கர்த்தரை நம்புங்கள்.
அவர் நல்லவர்
என்றது குரல்.
நல்லது என்று எதுவுமே இல்லை
நல்லவர் என்று எவருமே இல்லை என
முழுதாய் நம்பத் தொடங்கிய கணம் அது.
தேவன் நம் அருகில் இருக்கிறான்
என்றது குரல்.
என்னருகில் யாருமே இல்லை
அப்போது.
சர்வ வல்லமை படைத்தவர்
அவரை நம்புங்கள்
என்றது குரல்.
மனிதர்கள் மீது
நம்பிக்கை அற்றிருந்தேன் அப்போது.
பைபிளைக் கைக்கொள்ளுங்கள்
அது நம்மைக் காப்பாற்றும்
என்றது குரல்.
என் கையில்
ஒரு கவிதை நூல் இருந்தது
அப்போது.
அவர் நமக்காகவே மரித்தார்
என்றது குரல்.
வலியின்றி இறந்து போவதைப் பற்றி
தீவிரமாய்,
அதிதீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்த
நாட்கள் அவை.
மனிதன் அப்பத்தினால் மட்டுமின்றி
கடவுளின் வாயிலிருந்து வரும்
வார்த்தைகளாலும் உயிர் வாழ்கிறான்
என்றது குரல்.
தேவிடியா என்ற வார்த்தையைத்
தேவன் கூறியிருக்க முடியாது என்றும்
அந்த வார்த்தை தரும் வலியை
தேவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும்
சொல்லிக் கொண்டேன்.
அல்லேலுயா
கர்த்தருக்கு அல்லேலுயாஎன்று
உரத்துப் பாடியபடி
என்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது
அந்தக் குரல்
சூம்பிப் போன கைகளால்
தன் மிதிவண்டியை இயக்கியபடி.
ஒரு மோசமான தேநீரைப் பருகியபடி
பார்த்துக் கொண்டிருந்தேன்.