புஹாரிராஜாவின் கவிதை






இப்போதெல்லாம் 
கியாஸ் சிலிண்டர்கள்
கூட வெடிப்பதில்லை.அது
மண்ணென்ணெய் அடுப்புகள்
வெடித்துக்கொண்டிருந்த காலம்
கூடவே பதின்பருவத்து 
பெண்ணொருத்தியையும்
சேர்த்தே கொளுத்தியிருக்கும்.

பள்ளிப்படிப்பை முடித்து வீட்டோடு இருந்த
தெய்வானை அக்காவுக்கும்,
கல்லூரி படிப்பை முடித்து
அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி
செய்துகொண்டிருந்த சலீம் அண்ணனுக்கும்
எப்படி அறிமுகம் என்றெல்லாம்
எனக்கு தெரியாது..
தேன்மிட்டாய்க்கும்,தேங்காய் மிட்டாய்க்கும்
கோலிகுண்டுகளுக்கும்,பம்பரத்திற்கும்
ஆசைப்பட்டே ஒத்துக்கொண்டேன்
இருவருக்கும் இடையே
தூதுவராக மாறுவதற்கு.
இரண்டு வாழ்த்து அட்டை,ஒரு பிள்ளையார் சிலை
ஒரு மயில்ரேகை கொத்து பதினைந்து கடிதங்கள் 
இடம் மாற்றி இருப்பேன் இருவருக்குமிடையே
அந்த பதினாறாவது கடிதம் தான் சிக்கிகொண்டது
தெய்வானை அக்காவின் சித்தப்பாவிடம்.
அடுத்த பத்தே நாளில்
ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்
ஸ்டவ் வெடித்து 
அக்கா செத்துபோய்விட்டாளென்று.



கவிஞர் புஹாரிராஜா சிறு குறிப்பு