கடவுளுக்காக காத்திருப்பவன் - மனுஷி


பனிபொழியும் நள்ளிரவில்
ஈசிஆர் சாலையோரத்தில்
சிமெண்ட் கட்டையின் மீது
கைகளைத் தலையணையாகக் கொண்டு
அவன் சயனித்திருந்தான்
பார்வை வான்வெளியை வெறித்தபடி இருந்தன
அந்தப் பார்வையில் காத்திருப்பதற்கான
முகாந்திரங்கள் தென்பட்டன

அந்தக் குளிருக்கு ஏற்ற ஆடையை
அணிந்திருக்கவில்லை
தனது அரை நிர்வாணத்தையும்
அவ்வப்போது கடந்துபோகும்
வாகனங்களின் பேரிரைச்சலையும் பொருட்படுத்தவே இல்லை
இரவைக் கண்டும்
நிழலைக் கண்டு சப்தமிடும் நாய்களையும்
இரவில் கடந்து போகும் ஒன்றிரண்டு மனிதர்களையும்
கண்டுகொள்ளவேயில்லை
ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு
அருகிலிருந்த எருக்கங்செடியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்
கடவுள் வருவார்
அவருக்காக காத்திருக்கிறேன் என்று
சற்று நேரத்தில் அவன் படுக்கை அருகில்
ஊர்ந்து போன சிறு பாம்பிடமும்
மரப்பல்லியிடமும்
ஒழுங்கற்ற ஒழுங்கில் சென்று கொண்டிருந்த எறும்புகளிடமும்
அதையே சொன்னான்
பின்பு அந்த இரவு குறித்தும்
பனி பொழிவதைக் குறித்தும்
நட்சத்திரங்களால் சூழப்பட்ட நிலவைக் குறித்தும்
தரையில் எழுதிக் கொண்டிருந்தான்
அவனது எழுத்து
இரவைத் திருத்தியமைத்து புதிதாய்ச் செய்தது
அவனது காத்திருப்பு
யுகங்களை உண்டு செரித்திருந்தது
உறங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது
உறக்கமற்ற இரவு கலைந்து கொண்டிருந்தது
ஒரு மேகத்தைப்போல
அதிகாலையில் கரைந்து சென்ற காக்கைகள்
அவனருகில் வந்து
கடவுளே எழுந்திரு விடிந்துவிட்டது என்று
உரத்துக் கூறியபடி பறந்து சென்றன

கவிஞர் மனுஷி சிறு குறிப்பு