வெற்றிடத்தில் பறத்தல் - இல.சைலபதி




தனியாக
வெற்றிடவானத்தில் பறத்தல்
அலாதியானது.
சிறகடிப்புகள் இல்லாமல்
நதியில் வீழ்ந்து ஓடும்
ஒரு மலரைப்போல
ஆகாசத்தை வருடிக்கொண்டே பறத்தல்
தவம் போன்றது
கூடுகள், குஞ்சுகள்
இரை, இணை இவை மட்டுமல்ல
பறவை ஏதோ நினைப்பில்
இலக்கின்றி வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிடும்
என் பைத்தியக்காரத்தனமும்தான்.
பறத்தல்தான்
எல்லாவற்றையும் இயல்பாக வைக்கிறது
அப்பொழுதுதான்
கூடுகளும் கொஞ்சம் இளைப்பாறுகின்றன.