இன்பா சுப்பிரமணியம் கவிதைகள்

 பெருவனம்

ஊதக் காற்று
அடித்து முடிக்கையில் 
தொடர்ந்தது அடுத்த காற்றென 
சிலுசிலுத்தது பெருவனம் 

செக்கரடிக்கும் சந்தியும் 
நவ்வை பழங்களால் நிறைந்த அந்தியும் 
தனதென கெக்கலித்துக் கூவி திரிந்தது 
கால் அசையாது 
வெண் மேகமென பறந்த
சிறகு வெட்டப்படா பறவைகள் 


சிறு மரத்துண்டுகளால் இணைக்கப்பட்ட 
செயற்கை ஊஞ்சலில் 
ஆடிக் களிக்கவும் 
ஓட்டை முட்டிகளில் 
புணரவும் 
உறங்கவும் 
முட்டையிட்டு அடைகாக்கவும் 
பறத்தலை மறந்த
பறவைகளும் பாடின ...
உயிர் தொடும் வலியும் 
குருதி உறையும் பயமும் 
மலையை கரைக்கும் சோகமும் 
அடைக்கப்பட்ட அதன் 
கூண்டுக் கம்பிகளில் 
பட்டுத் தெறித்து 
அடுத்து வந்த காற்றில் 
இடியென மோதிச் சுவடின்றிச் சிதறியது 

சிறகு வெட்டப்பட்டு  
சுதந்திரம் கிட்டாத 
கூண்டுப் பறவைகளின் 
பாடல்கள்  ......



கண்களின் வழியே  


குஞ்சுகள் பின்தொடர 
குப்பையில் இரை தேடிய 
கோழியின் கழுத்து  
மளுக்கென  திருகப் பட 
சின்ன உடலில் ஒளிந்திருந்த 
உயிர் கண்வழியே வெளியேறியது 


தழைகளை அசைபோட்டபடி இருந்த ஆடு 
ஒரே வீச்சில் கழுத்து அறுபட , 
நிலைத்த கண்களின் வழியே 
உயிர் பயம் காட்டி அடங்கியது 

றெக்கை முறிபட்ட பறவை  
ஒருவர் கையிலும் சிக்கிவிடாமலிருக்க 
இலைகளினூடே மறைந்து கொண்டது 

என் மீதான உனதன்பும் 
திருகப்பட்டும் 
அறுக்கப்பட்டும் 
முறிக்கப்பட, 
நெகிழ்ந்த காமத்தையும் 
சில நினைவுகளையும் மட்டும் 
உயிரினுள் பொதித்து 
மறைத்து வைத்தேன் 

இறந்த மீன்களின் கண்களென 
துருத்தி இருந்தது 
காலம்