”குறுஞ்
செய்திகளில்
பெரும்பாலும்
கொப்பளிக்கிறது
காமம்”””””””
எனும் அலுப்பான வரிகளை
ஆரம்ப இழையாகக்
கொண்டு தன் வலைப் பின்னலைத்
தொடர ஊசலாடிக் கொண்டிருந்தது
”தற்கொலையைக் கற்றுத் தந்ததும்
அப்பாதான்...” என்று
அடுத்த சுறுசுறுப்பான வரிகளில்
தன் இழை சுருக்கிக் கூரை
பற்றிக் கொண்டது
”அவரது ஒரு நண்பர் உடல் முழுக்கத்
தாமிரக் கம்பியைச்
சுற்றிக் கொண்டு மின்சாரம்
பாய்ச்சிக் கருகிச் செத்ததாக,”
அத்தனை இளவயதில்
அப்பா சொன்ன ’பட்டுஇழை’
வாகாகப் பற்றிக் கொள்ளக்
குறுக்கும் மறுக்குமாக
மூளைச் சுவரில்
கவிதை வரிகள்
எந்தப் பூச்சியும் வலையில்
சிக்காமல்
வலையையே உண்ணத்
தொடங்கிய பொழுதுகளில்
”தூக்க மாத்திரைகள்
தொல்லையில்லாதவை,
தோல்வியில்லாதவையா
சொல்ல முடியாது”
என்னும் என் அனுபவத்தை
கவிதை இழையாய்
என் மகனுக்கு
விட்டுச் சொல்கிறேன்
சுறு சுறுப்பான வரியா
எனத் தெரியாமல்