உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களை
புரிந்துக்கொள்ள முடியாது
ஏனெனில்
எங்கள் சாமிக்களுக்கென்று
உணர்வுகள் ஏதுமிருந்ததில்லை
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களுக்கு
படையல் போட முடியாது
ஏனெனில்
உங்கள் சாமிக்களின்
உணவுப்பழக்கம் வேறு
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களை
பழிக்காமல் இருக்க முடிந்ததில்லை
ஏனெனில்
எங்கள் சாமிக்களின்
உடையலங்காரம் வேறு
அது ஒருபோதும்
உங்கள் சாமிக்களை போல்
நளினமாக இருந்ததில்லை
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களுக்கு
அர்ச்சனை செய்ய முடிந்ததில்லை
ஏனெனில்
எங்கள் சாமிக்களின்
மொழிகள் வேறு
அது உங்களுக்கு புரியாது
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களுக்கு
ஆலயம் கட்ட முடிந்ததில்லை
ஏனெனில்
எங்கள் சாமிக்களின்
ஆகமவிதிகள் வேறு
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களை
தொட்டு தூக்க முடிந்ததில்லை
காரணம்
எங்கள் சாமிக்கள்
காலம் காலமாக
புறக்கணிப்பையும்,துரோகங்களையும்
சுமந்து சுமந்து மலையாக சமைந்தவர்கள்
உங்களால் ஒருபோதும்
எங்கள் சாமிக்களை
வணங்க முடியாது
ஏனெனில்
எங்கள் சாமிக்கள்
காலம் காலமாக
உங்கள் சாமிக்களுக்கென
நேர்ந்து விடப்பட்டவர்கள்