1.
நீங்கள் வருவதற்கு முன்,
நீங்கள் வருவதற்கு முன்,
என்னதென
நினைவில்லை,
ஒரு
கனவுகண்டிருந்தேன்.
நினைவில்லாத
ஒரு கனவுகண்டதன் பின்
உங்களைச்
சந்திப்பது
எனக்குப்
பிடித்திருக்கிறது.
2.
குளிருட்டப்பட்ட,
மென்வெளிச்சமுடைய
உணவகத்தில்
அவளைப் பார்த்தேன்.
படிந்திருக்கும்
ரத்தக் கறையைத்
துப்புரவாக்குவது
போல,
கைகளைக்
கழுவினாள்.
பாவங்களைத்
துடைப்பதாக
விரல்களை
உலர்த்தினாள்.
இவ்வளவு
கழுவ
இவ்வளவு
துடைக்க ஒன்றுமில்லாத
எச்சில்
வாழ்வுடன்
நான்
காத்திருக்கும்போது
அவள்
வெளியேறிக்கொண்டிருந்தாள்
வாள்
ஒன்று வீசப்பட்ட
கச்சிதத்துடன்.