சக்தி ஜோதி கவிதைகள்




சிறு நீலப் பறவையை உணர்தல் 

அடிமண்ணில் உள்ளூறிப் பெருகும்
நீரூற்றின்  மினுமினுப்பில்
சிறகு நனைக்கும் பறவைப்பொழுதில்
புராதனப்பனி திரண்டு பொழிகிற
கீழ்வானக் குளிர்கனவையும்
இறகடி இளம் சூட்டினை விரலளைந்து உணர்ந்த
ரகசிய கனவினையும் 
ஒருசேர உணர்ந்த
அப்படி ஒரு அதிகாலையை
பின்னெந்த நாளிலும் சந்திக்கவில்லை
விரும்பவுமில்லை

அது
வெளிச்சத்துகள் நிலத்தை வந்தடையும் முன்பாக
இரவின் விளிம்பில் சிறகு விரித்த
முதல் சிறு நீலப் பறவையை உணர்ந்த கணம் .


 



ஆவியாகாத மௌன கணங்கள்

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்று குழம்பினாள்
வெளியே கிளம்பும் பொழுது
வழக்கமான நிகழ்வு தான்
என்றபோதும்
இன்று வேறுமாதிரி உணர்வு

பார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்
தரையில் உறங்குகிற 
இரண்டு குழந்தைகளையும்  முத்தமிட்டாள்
வெள்ளைக் காகிதத்தைத் எடுத்து
இரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி
நான்குபுறமும் பிசிறின்றி மடித்தாள்
துளியும் பிசிறு விழாத செயல்களைச் செய்வதில்
விருப்பமுடையவள் அவள்
அறையின்  சூழல் உணராது உறங்கும்
கணவனைப் பார்த்தாள்
மிக அன்னியமாக உணர்ந்தாள்
அப்படியே குழந்தைகளைப் பார்த்தாள்

சுழழும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்
காற்று தடைபட
குழந்தைகள் விழிக்க வாய்ப்பிருக்கிறது
போதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது
சந்தேகம் தான்