ஸில்வியா ப்ளாத் கவிதைகள் - தமிழில்: அசதா.






விருந்து தர்ப்பூசணிகள்

பெனிடோமில் தர்ப்பூசணிகள் இருக்கின்றன
கழுதை வண்டிகள் நிரம்ப.

கணக்கில்லாத தர்ப்பூசணிகள்,
முட்டை வடிவில் பந்து வடிவில்.

ஒளிர் பச்சை வண்ண, தட்டி ஓசையெழுப்பத் தோதான
மேலே ஆமை-பச்சைக் கோடுகள் பாவிய
தர்ப்பூசணிகள்.

முட்டை வடிவைத் தேர்ந்தெடு,
உலக வடிவையும்.


கடும்வெப்ப மதியத்தில்
ருசித்துப் பார்க்க வீட்டைப் பார்த்து ஒன்றை உருட்டி விடு.

பாலேடொத்த மென்மையான தேன்துளிகள்,
இளஞ்சிவப்புக் கூழ்மிக்க பெரிய பழங்கள்,

உள்ளே ஆரஞ்சுடன் வெளியே பிதுங்கியிருக்கும் பரங்கிகள்.
வெட்டியெடுத்த ஒவ்வொரு துண்டும் வெளுத்த அல்லது
கறுப்பான விதைகளின் காதணிகளை அணிந்திருக்கிறது,

இந்த தர்ப்பூசணி தின்னும் விருந்துக் கூட்டத்தாரின் பாதங்களுக்கடியில் விழாக் கொண்ணாட்டத்து
வண்ணக் காகிதங்களைப் போல
இறைந்து கிடக்க.

------------------------------  

உறுதிப்பாடு
ஸில்வியா ப்ளாத்

மூடுபனி நாள்: ஒளி குன்றும் தினம்

பயன்படுத்த இயலாத கைகளுடன்
பால் வண்டிக்காக காத்திருக்கிறேன்
ஒற்றைக் காதுப் பூனை
தன் சாம்பல் நிறப் பாதத்தை நக்குகிறது

கரி நெருப்பு எரிகிறது

சிறு புதர்வேலிக்கு வெளியே
இலைகள் மிக மஞ்சளாகி வருகின்றன
பால் திரையொன்று
ஜன்னலில் வைத்த
காலிப் போத்தல்களை
தெளிவற்றதாக்குகிறது

மகிமை ஏதும் இறங்கிவரவில்லை

பக்கத்துவீட்டு ரோஜாச்  செடியின்
வளைந்த தண்டில்
இரண்டு நீர்த்துளிகள்
சொட்டாது நிற்கின்றன

முட்களின் வளைந்த வில்லே.

பூனை தனது
நகங்களை வெளியே காட்டுகிறது
உலகம் திரும்புகிறது

இன்று
இன்று நான்
கறுப்பு கவுன் அணிந்த எனது பன்னிரண்டு
ஆய்வாளர்களின் மருள் நீக்க மாட்டேன்
காற்றின் பரிகாசத்தில்
முஷ்டியால் குத்தவும் மாட்டேன்.