மெலிதாய் மழை
தன் வாசனையை
மண்ணுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறது...
என்ன செய்வது
என்று தெரியாமல்
குடையைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்
என் குடையைத்
தரவா என்று
சக ஊழியர; ஒருவர; வேண்டுகோள்
விடுக்கிறார்
தரைக் குழியின்
உள்ளிருந்து வந்த தவளை
மழையின் பாடலை
உரத்த குரலில்
பாடத் தொடங்குகிறது...
நனைந்து
விடக்கூடாது என்ற ஒரே எண்ணம்
மழையில் இருந்து
வெகு தூரத்தில்
நீரின்
ஸ்பரிசமற்ற ஓரிடத்தில் கொண்டு நிறுத்துகிறது
பேசுவதற்கான
ஈரம் கூடவன்றி
நாக்கு நீருக்கு
துளாவுகிறது.
என் மேல்
இரக்கம் கொண்ட கடவுள்
இனி மழை
பெய்யாது என்பதை
வரமாக அருளிச்
சென்றார;.
நாடெங்கிலும்
தவளைகள்
இறந்துவிட்ட
செய்தி வந்தவண்ணம் உள்ளது.