யன்னலோரம் சென்று பார்க்கிறேன்
சிறு மணியோசையில் செவி சிலிர்க்கும்
வீட்டுச் செவலை நாய்.
உறுமிக் குரைக்கு முன்னே
கடப்பின் மேலால் பறந்து மு
ற்றத்தில் வீழும்
காகிதம்
மதில்காகம் இரை என எண்ணிப் பறந்து
பின் திரும்பி மாங்கொப்பில் தரிக்கிறது
முற்றத்தில் மிளகாய்ச் செடி.
சிறு உயர இடைவெளியில்
மெழுகுத் தீக்குச்சி அளவில் உடல்
நீந்தியும் நின்றும் ஒற்றைத்தும்பி.
பச்சையங்கள் எதிலும் குந்தி மொய்க்கவே இல்லை.
அழுத்த வெளியில் அகதியாய் விட்டுச் செல்கிறது
சுழன்று எழுந்த தரைக் காற்று.
கொடியில் காய்கிறது
துவைத்து சுருங்கிய ரவிக்கை
துணிச் சுருக்கத்தின் ஒரு நிழலில்
தரிசித்து இருக்கிறது அந்த தும்பி.
மதியத்தின் பின் மாறு வெய்யில் அடிக்கும்
ஒளியும் வெப்பமும் ஆகும் முன்னைய நிழல்கள்.
தும்பி-
ஒருவேளை மயங்கி கருகலாம்
அல்லது
எதிர் பக்க நிழலில் பறந்து செல்லலாம்.
யன்னலை மூடி கதவைத் திறக்கிறேன்
கொஞ்சம் நகர்ந்தே போய் கிடக்கிறது காகிதம்.