ஓயாப்பெரு நடனம் 5 - ஆத்மார்த்தி




                                                   படிமம் படுத்தும் பாடு

கலாப்ரியா
போகன் சங்கர்

 


            
நவகவிதை என்று வந்தாலே நாலைந்து கத்திகள் வரிசையாய்த் தொங்கும்.நீ எப்பிடி எழுதுறேன்னு நான் பாத்துர்றேன் என்று அசரீரிகள் தயாராய்க் கழுத்தை நெறிக்கும். மொழிப்பின் புலத்தில் தமிழை ஒரு டிகிரியாக படித்து விட்டு வருபவர்கள் ஒரு ரகம்.யாப்பு சந்தம் அணி தளை சீர் லொட்டு லொசுக்கு என்று இலக்கண வகைமைகளின் மீது தீராப்ரியமும் மாறாத் தேடலும் அமைந்திருப்பர்.மரபுக்கவிதை மாதிரி உண்டா என்ற
குரல் என்றென்றும் மாறாது ஒலிக்கும்.
                 
நவகவிதை என்று வருகையில் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ராஜேஷ் நிலா ரசிகனாவார். ஷான் என்றொரு இளைஞர் அவரும் க.ராமசாமியும் வேலை பார்ப்பது ஒரே கட்டிடத்தில் இயங்கும் வெவ்வேறு நிறுவனங்களில்.பாத்திரக்கடையை நடத்தி வரும் ஜெயபாஸ்கரனும், ஒரு மருத்துவமனையை நிர்வகிக்கும் ஆத்மார்த்திக்கும் நகைக்கடையின் முதலாளியான தேவதச்சன் அண்ணாச்சியும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சக்திஜோதியும் புவியியல் ஆசிரியரான லிபி ஆரண்யாவும் ஒன்றிணையும் புள்ளி எது என்றால் அது தான் புதுக்கவிதை.
                       
கவிஞர்கள் உண்மையில் ஸ்லீப்பர்செல்கள் தானோ எனத் தோன்றுகிறது.அவர்களுக்குள் இருக்கும் கவிதை அவர்களை நெருக்காதவரை அவர்கள் வெவ்வேறு பணிகளைச் செய்தபடி வாழ்வை நகர்த்துகின்றனர்.ஆனால் கவிதை என்னும் பொதுப்புள்ளி அவர்களை இயக்குகிற பேயாகின்றது.அதன் பிறகென்ன..?பேயாட்டம் தான்.
                                 
புதுக்கவிதையின் துவாரபாலகர்களாக துணைக்கிரகங்களாக ஏன் நந்திதேவர்களாகவே சிலரை சொல்லித்தாண்ட வேண்டி யிருக்கிறது. படிமம் குறியீடு தொன்மம் இருண்மை இவைகளை எல்லாம் முற்று முதலாக அறிந்துகொண்ட பிற்பாடு தான் புதுக்கவிதை எழுத வேண்டும் என்று எந்த ஆதிக்கிரமமும் இல்லை என்பது சிறிய ஆறுதல் தான்.என்றாலும் புதுக்கவிதை என்னும் வடிவற்ற வடிவத்துக்குள் இவற்றின் இயங்கியல் முற்றிலுமாய்த் தவிர்த்து விடக் கூடியது அல்ல,

                 
படிமம் என்பதை முதலில் பார்க்கலாம்.

ஒரு கவிதையில் ஒரு சொல் எழுதப்படுகிறது.ஒவ்வொரு சொற்களாய் சேர்க்கப் படுகின்றன. உரை நடைக்கோ கட்டுரைக்கோ இருக்கக் கூடிய எழுத்த்தொழுங்குகள் கவிதைக்குப் பொருந்துவதில்லை. கவிதை என்பதில் சொற்சேர்மானம் என்பது அதன் இருப்பைத் தாண்டி அவற்றிற்கிடையே இருக்கக் கூடிய மௌனத்தையும் சேர்த்து நிகழ்த்துகிறது. அதன் இல்லாமையும் சேர்த்து கவிதையின் இயக்கம் நேர்கின்றது.
       
மழை என்ற ஒரு சொல் வெறும் சொல் அன்று.எந்தச்சொல்லுமே அதன் அர்த்தத்தை நம் மனனத்தில் நிகழ்த்தியபடியே தான் இருக்கின்றன.அர்த்தத்தை நிகழ்த்துகிற அனுபவம் கவிதையாகிறது. எந்த வித அனுபவத்தையும் நிகழ்த்தாத ஒற்றைச்சொல்லைக் கூட நம்மால் சொல்ல முடியாது. அர்த்தம் என்பதை அனுபவம் என்று தான் மனனம் சொல்லும். முதன் முதலில் ஒரு மொழியை அறிகையில் ஒவ்வொரு சொல்லாய் முதன்முறை அறிந்துகொண்டே நம் மனனத்தில் அவற்றை சேகரித்துக் கொள்கிறோம்.அதன் பிறகு நம் மனனம் நிரந்தரமாய் இயங்கத் தொடங்குகின்றது.பூ எனச்சொல்லும் போதெல்லாம் நம் மனனம் விழித்துக்கொண்டு பூ என்பதன் அர்த்தத்தை நமக்குள் நேர்த்துகின்றதா இல்லையா..?
        
ஒரு கவிதையில் இடம்பெறுகிற சொற்கள் பெருமளவு ஒரு வாசகனின் மனதில் காட்சியாக விரிகின்றது.அப்படி விரிவது படிமம்.அப்படி விரிகையில் கற்பனை என்னும் சொற்பதம் பிளந்து ஒரு அனுபவம் காட்சியாக உருவெடுக்க அந்தச்சொற்கள் உதவுகின்றன.காட்சிப்படிமம் என்று இதனைச் சொல்ல முடியும்.பொதுவாக புதுக்கவிதைக்கு வெகு இணக்கமான படிம வகையாக காட்சிப்படிமத்தை சுட்ட முடியும்.பெரும் அளவுப் படிம நிகழ்தல்கள் காட்சிப் படிமம் சார்ந்தே நிகழுகின்றன. எஸ்றா பவுண்டின் கூற்று கீழ்க்கண்டவாறு படிமத்தைப் பிரகடனப் படுத்துகிறது.
  "
அறிவும் உணர்வும் கலந்த ஒரு மனோபாவத்தை நொடிப்பொழுதில் தெரியக்காட்டுவது படிமம் ஆகும்.ஒரு கவிதை கவிதையாகவோ அல்லது ஓவியம் சிற்பம் ஆகியவற்றை ஊடகங்களாக கொண்டோ வெளிப்படலாம்."
             
ஒரு கவிசொல்லி தான் சொல்ல வந்ததைக் காட்சியாக்கிச் சொல்வது தான் படிமம் என்பது
   
ஒரு பாடலை விஷூவலாகப் பார்க்கிறோம்.அதனுள் ஒரு பாடல் ஒரு வீடியோ ஒரு நடனம் ஒரு கலை அலங்காரம் ஒரு அல்லது பல நடிப்பு ஆகியன கூட்டாஞ்சோறாக இருக்கிறதல்லவா..?இங்கே ஒரு பாடலின் வரிகளைத் தனியாக வாசிக்கலாம்.அதன் நடனத்தைத் தனியாகப் பார்க்கலாம்.அதன் கலை அலங்காரத்தைத் தனியாக தரிசிக்கலாம்.ஒரு அல்லது சிலரின் நடிப்பைத் தனித்தனியாக அளவிடலாம்.நாம் பார்க்கிற காட்சி என்பது என்ன..?ஒரு பாடல் ஒரு நடிப்பு ஒரு கலை அலங்காரம் ஒரு நடனம் இப்படிப் பலவற்றின் சேர்மானப் பங்களிப்பு தான்.என்றாலும் இப்படிக் கூட்டாஞ்சோறாகப் படைக்கப்பட்ட ஒரு பாடலைப் பார்க்கையில் நாம் அடைகிற காட்சி அனுபவம் என்பதை தனித்தனியான பங்களிப்புகளை உடைப்பதன் மூலம் பெற முடியாதல்லவா..?அது போலத் தான் படிமமும்.அதன் பயனாக ஏற்படுகிற காட்சியனுபவமும்.
               
ஒரு கவிசொல்லி ""சுடுகாட்டில் பிணம் எரிகிறது"" என எழுதியிருக்கிறார்.வாசிக்கிறவனுக்கு தினமும் கடந்து செல்லும் வழியில் இருக்கிற சுடுகாட்டினின்றும் எழுகிற பிணமெரியும் நாற்றம் எழுகின்றது எனில் அந்த மணம் அந்தக் கவிதையினுள் படிமமாகின்றது என்று உணரலாம்.ஆஸ்பத்திரி வராந்தாவில் அல்லாடுகிறேன் என்று ஒரு வரி வருமேயானால் முதலில் ஆஸ்பத்திரி என்னும் மனன ஞாபகத்திலிருந்து அதன் தனித்த வாசனை வாசகனுக்குள் இயங்கத் தொடங்கும். அது அங்கே படிமமாகின்றது. காட்சிப் படிமம் போலவே பால்யம் என்பதும் தொழில்நுட்பம் என்பதும் குளிரும் வெயிலும் நிலமும் வனமும் வானமும் உளவியலும் படிம வகைகள் தான்.இது மற்றும் இன்னின்னது தான் படிமங்கள் என்று அறுதியிட்டுக் கணக்கை முடித்து விட முடியாது. அங்கதமும் தத்துவமும் கூடப் படிமங்களே.ஆளுக்கொரு கத்தி என்பது போலப் படிமம் என்பதும்.அவரவர் கத்திகளுக்கு இடையே வித்யாசம் இருப்பதைப் போல அத்தனை அத்தனை படிமங்கள் இருந்திடக் கூடும்.பெரும்பாலும் கவிதைகளுக்குள் இயங்குவது காட்சிப்படிமமே.
             
ஒரு விசயத்தைப் பற்றி விரிவுரைப்பதோ அதனை விளக்குவதோ அல்ல படிமம். சொற்களைத் தாண்டி அதன் வினை மற்றும் விளைதலை வாசக மனத்துக்குள் நேர்த்திக் காட்டிபடி உயிர்த்திருப்பதே படிமம் என்றாகும்.
              
               
தூரத்தே புணரும்
               
தண்டவாளங்கள்
               
அருகருகே வந்ததும்
               
விலகிப் போயின

கலாப்ரியாவின் இந்தக் கவிதையில் காட்சிப் படிமத்தின் செயல்பாட்டை எளிதாய்க் கண்ணுற இயலுகிறது.
போதும் படிமம்.
*********************************

சமீபத்திய இரு கவிதைகள்.

  
யாரோ தட்டியது போல்
  
திடுக்கிட்டு எழுந்தது
  
பூனை
 
  
எழுந்த அதிர்ச்சியில்
  
மீண்டும்
  
படுத்துக் கொண்டது

  
இந்தப் பூனைக்கு
  
புரட்சி
  
என்று பேர் வை
  
என்று நான் சொன்னது
  
யாருக்கும் புரியவில்லை.

   
போகன் சங்கரின் எரிவதும் அணைவதும் ஒன்றே என்னும் தொகுப்பில் காணப்படும் மேற்காணும் கவிதையில்
சொல்லப்பட்டிருக்கும் நிறமற்ற பூனையின் நிறமென்ன என்று சிந்திக்கலாம். ஒவ்வொரு நிறங்களாய் உரிந்துவிழும்
இக்கவிதையின் அனுபவம் நெடியது.சமீபத்தில் எழுதப்பட்ட சிறப்பான கவிதைகளில் ஒன்றாக இதனை முன்வைக்கிறேன்
 
இன்னொன்று ஷான் எழுதிய விரல்முனைக் கடவுள் தொகுப்பின் கீழ்க்காணும் கவிதை.

 
டோரா பொம்மை
 
கேட்டு அழுகிறது
 
குழந்தை காருக்கு
 
உள்ளேயும் வெளியேயும்


தொடரலாம்
ஆத்மார்த்தி