நீங்கள் கைகளை குவிப்பதுபற்றியதொரு கேள்வி... - ஜனா கே


 ஆலயம் விட்டுவரும்பொது யாரேனும்
இதைக் கேட்டுவிடுகிறார்கள்
சும்மாவேனும் கேட்பதான ஒரு பாவனையில்
அப்புறம்நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?
ஒரு புன்னகையை பதிலாக உதிர்க்கலாம்
ஏதோ ஒரு கணத்தில் உங்களுக்கு பேசவேண்டுமென
தோன்றும்போது சொல்லத்தொடங்குகிறீர்கள்.
"எதுவும் வேண்டுவதில்லை கைகளை குவித்து
கர்ப்பகிரகத்துக்குள் எரியும் அந்த சுடரைப் பார்த்துக்கொண்டெ
இருக்கிறேன்.
எனக்குள் என்ன நடக்கிறதென கவனிக்கிறேன்
அந்த சுடர் மிகவும் பிரகாசமாக எரியமுமாறு தூண்டப்பட்டிருக்கிறதா?
அது ஒரு வெண்கல விளக்கா அல்லது வெள்ளியா?
நல்லெண்னையா அல்லது பசுநெய்யா?
இந்த சிற்பி யாராக இருக்கும்?
இதுதான் யாழியா என்றெல்லாம் கவனம் தொடந்து பயணிக்கும்போது
மெதுவாக அங்கிருந்து வெளியேறுகிறேன்
அப்புறம் வெளியே நீங்கள் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்" என்று முடிக்கிறீர்கள்.
கேட்டவர் ஒரு அதிர்ச்சியைகுழப்பத்தைதிகைப்பை
அல்லது நம்பிக்கையின்மையை தனது முகத்தில் படரவிடுகிறார்
நீங்கள் அதை எதிர்பார்த்ததுபோலவே மெல்ல புன்னகைக்கிறீர்கள்
அப்படியென்றால் நீங்கள் நாத்திகரா என்ற கேள்வி அவசர அவசரமாக
முன்வைக்கைப்படுகிறது.
நீங்கள் அதை நாசூக்காக விலக்கி
நான் ஒரு அக்னாஸ்டிக் என்கிறீர்கள்
ஒரு புதிய வார்த்தையின் சரியான பொருளறியா தடுமாற்றத்துடன்
சங்கடமான சிரிப்பொன்றை வழியவிடுகிறார்
நீங்கள் சொன்ன அந்த வார்த்தையை பரஸ்பரம் தெரிந்த
அனைவருக்கும் கொடுக்கிறார்
அனைவரும் ஒரு கூழாங்கல்லை போல
அதனை நாவினடியில் வைத்துச் சுவைக்கிறார்கள்
பிறகுஅடுத்தமுறை கோவிலுக்கு திட்டமிடும்போது
உங்களை அழைப்பதில் தயங்குகிறார்கள்
பிறிதொருநாளில் நீங்கள் உதவிகேட்டு அவர்களிடம் போகும்போது
உங்கள் சார்பு நிலையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்
நீங்கள் இப்போது கைகளை விரித்தபடி
அவர்களின் வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்
கவனத்தைகுலைக்கப்போகும் அந்த இறுதிச் சொல்லிற்காக காத்திருக்கிறீர்கள்.