வருண்ய காண்டம் - வருண்யா ஜனார்த்தனன்


 1. சாம்பல் பூத்த ஆரண்யத்தில்
உன் முதல் அழுகை
புற்களின் விதைகளானது.
முலையறுந்தி ஓய்ந்த அந்த மெல்லிதழ்களின் ஆசுவாச மூச்சில்
முகில் சூழ்கொண்டு மழையானது.
உன் முதல் அசைவு துள்ளி விளையாடும்
மான்குட்டிகளானது
மேலிதழ் சுழித்த அந்த முதல் குறுநகையில் சிறகடித்து பறந்தன தேன்சிட்டுகள்.
இப்போது ஆரண்யத்தில் முதல் காலடியை நான் வைக்கும்போது
வண்ணத்துப்பூச்சிகளை சிறகுகளாக்கொண்ட குட்டி தேவதை
மான்குட்டிகள் இருபுறமும் துள்ளிக்குதித்தாட
தேன்சிட்டுகள் சிறகடிக்க
மென்புற்தரையில் விளையாட
அழைக்கிறாள்.
 2. உன் பிஞ்சு விரல்கள்
எனை தீண்டிச்செல்லும்
அந்த தருணத்தில்
என் யுகங்களின் வெறுமையை
விலக்கிச் செல்கிறாய்
மகிழ்ச்சியின் மலர்களை மலர்த்திச் செல்கிறாய்
3உனை பார்க்கையில்
உன் தாத்தாவிற்கு தோன்றுவது பக்தி
உன் பாட்டிக்கு கர்வம்
உன் அம்மைக்கு பூரிப்பு
எனக்கோ பரவசம்
எல்லோருக்குள்ளும் மறைவாய்
கொஞ்சம் பயம்.