நகுலனும் தேடலும் - நாகபிரகாஷ்





ஒரு நவீனக்கவிதைகளின் ஆரம்ப வாசகன் எனக்கு நகுலன் என்ன தந்தார்?

'அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை'

பொதுப்படையாக ஒரு மூத்தவராக இருந்து உன் சொந்த வழியே போடா என்கிறார். சும்மா ஒன்றும் சொல்வதில்லை. நாலு சாத்தென்றால் சாத்து திருச்சாத்து சாத்தி போகச்செய்கிறார்.

'இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்'

தூங்கிக்கிடப்பவனை நடுஇரவில் எழுப்பி என்றைக்கும் நிலைத்திருக்க விரும்பியவன்கள் போய்சேர்ந்த விதங்களை விவரித்து, பிரசவ அறையிலிருந்து பிணவறை வரைக்கும் சுற்றிப்பார்க்கச் செய்வித்து அலறவைக்கிறார். இத்தனையும் பத்து நொடியில் ஒரு தலைப்புகூட இல்லாமல் என்பதுதான் முக்கியம்.

தத்துவமூட்டைகள் எவ்வளவு எரிச்சல் தரக்கூடியவை என்பது எங்களைப்போன்ற பதின்பருவத்தாருக்கு தான் தெரியும். ஏனெனில் தேர்தல் நேரத்தில் யார் ஜெயிக்கக்கூடும் என்றும் வாக்கு வங்கியிலிருந்து ஜாதிக்கட்சிகளின் தற்போதைய வீரியம் வரைக்கும் யோசிக்கும் உங்களைவிடவும் குட்டிக்கதைகளை கேட்பதோடு ஆர்வம் வற்றி வயதுக்குவர காலமிருப்பதால் (வாக்களிக்கும் வயதுக்குவர) நடையை கட்டும் பதின்பருவத்தார் விரும்பாதவைகள் பட்டியலில் அதுவும் ஒன்று.

அப்படி அவசரகுண நட்புகள் சிலவற்றிற்கு நகுலனை நான் அறிமுகப்படுத்தி இருந்தேன். அவர்களால் புரிந்து கொள்ள இயலும் வகையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அச்சில தலைப்பற்ற கவிதைகள் அவர்களின் கைகளில் இருண்மை கவிதைகள் போல பொருளுரை வேண்டுவதாக அமையாமல் சமவயதுக்காரன் ஒருவன் எழுதியது போலவே (ஆழத்தேடும் காரியம் இங்கு குறிப்பிடப்படவில்லை... வெறும் புரிதல் மட்டும்) தோன்றியிருக்கிறது.

'....இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்'

இந்த திறப்பு கண்டிப்பாக அங்கேயே விட்டுச்செல்வதில்லை. இருக்குமோ, இல்லாமலிருக்குமோ கூடச்செல்லும் விருப்பம்... போகத்தான் வேண்டியிருக்கிறது..

நான் சந்யாசி ஆவதாக இருந்தால் ஒரு உலகிற்ச்சிறந்த சொற்பொழிவாற்ற மேற்கோளாக இந்த சில கவிதைகளே போதுமானதாக இருக்கும் என்று சொல்வேன். அதில் ஆன்மீகம் ஒளிந்திருக்கிறது. இக்கருத்து விவாதத்துக்கு உரிய ஒன்றாகவெல்லாம் இல்லை.

எல்லா மதங்களும், அதாவது அதன் மூல கருத்துக்கள் மக்களின் நல்வாழ்வை பிரதானப்படுத்தி நல்வழிப்படுத்தலை நோக்கமாக கொண்டே உருவாக்கப்பட்டன. புத்தரே ஒரு பகுத்தறிவுப் பரிதி. இரண்டாவது புத்த மாநாட்டில் தான் அவரை கடவுளாக்கும் சீரிய பணி செய்யப்படுகிறது. எல்லா மதங்களும் இப்படிப்பட்ட பின்னனியை கொண்டவையே. அவ்விதத்தில் நல்வழியில் நல்வாழ்கை வாழ்வதை சொல்வதே ஆன்மீகம் என்ற வார்தையால் ஏற்கத்தக்கது.

நகுலன் அவர்களின் சில கவிதைகளை படித்த பின்புதான் என் கவிதைகளில் மாயா வினோதங்களை ஒதுக்கிவிட்டு தேடலை அமைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் முதன்முதலில் எனக்கு நானே படித்துக்காட்டக் கூடிய தகுதி கொண்ட கவிதையே உருவானது.

பொதுவாக நவீனக்கவிதைகள் பல்வேறு சம்பவங்களின்போதான மனநிலையை ஒன்றினைத்து சில அனுபவங்களை தனக்குள் கொண்டிருப்பதாக இருக்கிறது. அதை அள்ளியெடுப்பது வாசகரின் சாமர்த்தியத்தை பொருத்திருக்கிறது. ஆனால், நகுலன் அவர்களின் கவிதைகளைப் பொருத்தவரை அனுபவமாக அதை அடைய அதிகம் பேரால் முடியாதாகையால் உணருதல் என்பதாகச் சொல்லலாம்.

தீ சுடும் என்பதோடு ஒப்பிட்டால் தீ இன்ன இன்ன அளவில் இப்படி இப்படிச் சுடும் என்ற அனுபவம் வேறு, அதற்கு நிறைய படவேண்டியிருக்கும். நகுலனின் கவிதைகளை நான் இப்படித்தான் உணர்ந்தேன். அதை அனுபவமாக, வெற்றிகரமான நல்லனுபவமாக மாற்றத் துடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.