கிட்டத்தட்ட ஒரு கவிதை - சார்லஸ் புக்காவஸ்கி (தமிழில் ஆர்.அபிலாஷ்)


செயற்கை நீரூற்றில் உன் குட்டி நீலக்கரங்களால்
நீர் அருந்துவதை காண்கிறேன், இல்லை,
உன் கைகள் குட்டி அல்ல, அவை சிறியவை
நீரூற்று பிரான்ஸில் உள்ளது
அங்கிருந்து தான் உன் கடைசிக்கடிதத்தை எழுதினாய்
நானும் பதிலெழுதினேன்; அதன் பின் உன்னிடம் இருந்து கேட்கவில்லை.
நீ “தேவதைகள் மற்றும் கடவுள்கள்” பற்றி பித்துக் கவிதைகள்
எழுதினாய், எல்லாம் பெரிய எழுத்துக்களில்;
உனக்கு பிரபல ஓவியர்களை தெரியும், பெரும்பாலானவர்கள் உனது காதலர்கள்.
நான் உனக்கு எழுதினேன், எல்லாம் சரிதான், தொடர்ந்திடு, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திடு, எனக்கு பொறாமை ஒன்றும் இல்லை
நாம் தான் சந்தித்ததே இல்லையே. நியு ஆர்லியன்ஸில்
நாம் ஒருமுறை நெருங்கினோம், ஒரு கட்டிட தொகுப்பின் இடைவெளியில், ஆனால்
நாம் ஒருக்காலும் சந்திக்கவில்லை, ஒருமுறை கூட ஸ்பரிசித்ததில்லை.
அப்படி, நீ பிரபலங்களுடன் சென்றாய்,
பிரபலங்கள் பற்றி எழுதினாய், ஆமாம், பிரபலங்கள் தம் பிரபலத்தை பற்றி அன்றி – தம் படுக்கையில் இருக்கும் அழகான பெண்ணைப் பற்றி, தமக்கு எல்லாம் தந்து விட்டு காலை எழுந்ததும்
”தேவதைகள் மற்றும் கடவுள்கள்” பற்றி பெரிய எழுத்துக்களில்
கவிதைகள் எழுதும் அவளைப் பற்றி கவலைப்படுவதில்லை என நீ அறிந்து கொண்டாய் தான்.
அவர்கள் எங்களிடம் சொன்னார்கள், ’எங்களுக்கு கடவுள் இறந்து விட்டாரென தெரியும்’. ஆனால் உன்னை கவனித்தால்
எனக்கு அது சரியில்லையோ என குழம்புகிறது. ஒருவேளை
அந்த பெரிய எழுத்துக்களினால் இருக்கலாம்.
நீ மிகச்சிறந்த பெண் கவிஞர்களில் ஒருத்தி,
நான் என் பதிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கூறினேன்,
“அவளை, பதிப்பியுங்கள், அவள் பைத்தியம் தான் ஆனால் அவள் ஒரு மேஜிக். அவளது நெருப்பில் பொய்யில்லை” நான் உன்னை நேசித்தேன்
தான் ஸ்பரிசிக்காத ஒரு பெண்ணை, வெறுமனே கடிதம் மட்டும் எழுதுகிற, அவளது சிறு புகைப்படங்கள் மட்டும் பாதுகாக்கிற ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல.

ஒரு சின்ன அறையில் இருந்து சிகரெட்டுகளை சுருட்டியபடி கழிப்பறையில் நீ மூத்திரம் அடிப்பதை கேட்கிறவனாக இருந்தால்
உன்னை இன்னும் அதிகம் நேசித்திருப்பேன்,
ஆனால் அது நிகழவில்லை. உன் கடிதங்கள் மேலும் சோகமாயின.
உன் காதலர்கள் துரோகித்தனர், நான் திரும்ப எழுதினேன், செல்லக் குட்டி, எல்லா காதலர்களும் துரோகிக்க கூடியவர்களே என.
அது உனக்கு உதவவில்லை. உனக்கு அழுவதற்கு ஒரு நீளிருக்கை உண்டென சொன்னாய். அது ஒரு பாலத்தின் அருகே இருந்தது.
பாலம் ஒரு நதியருகே இருந்தது; நீ அழும் நீளிருக்கையில்
ஒவ்வொரு இரவும் அமர்ந்து அமர்ந்து
உன்னை நோகடித்த, மறந்து போன காதலர்களை எண்ணி அழுதாய்.
நான் திரும்ப எழுதினேன். ஆனால் உன்னிடம் இருந்து பிறகு ஒருபோதும் பதில் இல்லை.
உன் தற்கொலை பற்றி நண்பன் ஒருவன் எனக்கு எழுதினான்,
அது நடந்து மூன்று நான்கு மாதங்களுக்கு பிறகு.
நான் உன்னை சந்தித்திருந்தால்
நான் உன்னிடமோ அல்லது என்னிடமோ
நியாயமற்று நடந்திருக்கலாம்.
இது இப்படி நடந்ததே
சிறந்தது.