கோசின்ரா கவிதைகள்





கனவுப் பெண்ணை
கடந்து போகும் பெண்களின்
சாயைகளிடமிருந்து உருவாக்குகிறேன்
உதடுகளின் பிரதி
ஒரு ஓவியத்திலிருந்து எடுக்கப்பட்டது
உதடுகளில் உட்கார்ந்திருக்கும்
மெளனம் மாலதியுடையது
உறைந்திருக்கும் முத்தம்
ஷோபாவுடையது
ஒளிந்திருக்கும் சொற்கள்
கவிஞர் கமலதாஸின் கவிதைகளால் ஆனது
அந்த உதட்டின் குரல்
பி சுசீலாவால் ஆனது
கனவுபெண்ணை உருவாக்க
அய்ம்பது வருடங்களில்
உதடுகள் மட்டும் வரைந்திருக்கின்றேன்
அதற்கு வண்ணம் தீட்ட வில்லை
வெறுமை கவிழ்ந்த தூரிகையில்
வெறும் கோடுகளால் வரையப்பட்ட
உதட்டை எத்தனை தடவை
மாற்றி வைப்பேனென்று
தூரிகையை
தின்று விட்டன உதடுகள்
எப்படி முளைத்தன பற்கள்.
3
அவளை கடும் பகலில் சந்தித்தேன்
பசியாய் எனக்குள்
பொங்கிக்கொண்டிருந்தாள்
கனிந்த மல்கோவா போலிருந்தது
அவளது சிரிப்பு
ஆவலோடு நெருங்கினேன்
வாசத்தை இலையாய் விரித்தாள்
வேக வைத்த வார்த்தைகளை
கொட்டினாள்
ஓரத்தில் உதடுகளை வைத்தாள் ஊறுகாய் போல
வெயில் சிலந்தி பணியிலிருந்தது
முந்தானையால் நிழலை பிரசவித்தாள்
எனக்குத்தெரியும்
இந்தப் பசி தனியல்ல
எந்தப்பசியும் இன்னொரு
வாரிசை  உருவாக்கிவிட்டே சாகிறது