ஐந்து நிமிடத்தில் மூன்று கனவுகள் - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி



நீர் நிரம்பி வழியும்
கிணறொன்றில்
ஒரு நான்கு ஐந்து பேர்
கயிறொன்றை கட்டி
அதை பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கையில்
ஒண்ணு
ரெண்டு
மூணு
என
எண்ணிக்கொண்டே
ஒவ்வொருவரும்
கயிறினை விட
கடைசியாய் பிடித்து
கொண்டிருந்த
அவனும்
விட்டுவிட
நீரில் மூழ்கி
மூச்சு முட்டுகிறது
அவனுக்கு.
அப்படியே
ஒரு தொடர் போல
எல்லோர் முகமும்
ஒரு நொடி தோன்றி
மறைகிறது.

திடீரென
ஒரு மாடி அறையில்
இவனுடன் சேர்ந்து
இன்ன சிலரும்
நின்றுகொண்டிருக்க
அப்பொழுதுதான்
அவனுணர்கிறான் தான்
மட்டும் பனியனுடன்
நின்று கொண்டிருப்பதை;
ஒரு அறைக்கதவு
திறக்கபடுகிறது
அங்கே ஒரு பெண்
தான் அமர்ந்திருக்கும்
இருக்கையிலிருந்தபடி
இவனை நோக்கி
திரும்பியதும்
i'l be back
என்று சொல்லி
மாடிப்படி
இறங்க
எத்தனிக்கையில்
சட்டென
மாடிப்படி
பாதியில்
துண்டாகி
வேறொரு
இடத்தில
இணைகிறது.

Loading p......@gmail.com...
மேரேஜ் இன்விடேஷன்
என்ற
சப்ஜெக்ட் லைனுடன்
திருமண அழைப்பிதழின்
அட்டாச்மென்ட்
பிடிஎப்
வடிவில்
இருந்தது...
ஹேய்
எனக்கு
கல்யாணம்
என
ஆங்கிலம்
நிறைந்த
எழுத்துக்கள்
நீளும்
ஒரு
ஈமெயிலை
படித்துக்கொண்டிருந்த
கணத்தில்

செல்போன்
அதிர்வு
நினைவுகளை
திரும்பி
கொணர்ந்ததை
உணர்ந்து
அழைப்பை
எடுத்து
பேசத் தொடங்கினான்

மச்சி
இன்னைக்கு
நைட்டு
என்ன
சமையல்
என்ற
தமிழின்
கேள்விக்கு
பதில்
சொல்லிக்கொண்டே
கண்களை
கசக்கிக்கொண்டு
எழுந்து போய்
முகத்தை
கழுவ
போனான்
அவன்.