கவிதை எஃப்.எம் (தமிழின் முக்கிய கவிதைகளை அறிமுகப்படுத்தும் தொடர்) - பா.சரவணன்

ரமேஷ் பிரேதன் கவிதைகள்
Image result for ரமேஷ் பிரேதன்
1.    
அதிகாரத்தின் வலை எங்கும் விரிந்து, மின்னஞ்சல்,இணையம்,ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நுண்ணிய ஆயுதங்களாகப் பிரயோகிக்கப்படுகிறது. கவியின் வார்த்தைகளை என்ன செய்வது?

வார்த்தைகளால் ஆனவனின் புலம்பல்:
-------------------------------------------------------------------------
    
அவர்களைப் பற்றி பேசாதிருப்பது நல்லது
சர்வ வல்லமை படைத்த அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்
இரவும் பகலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டவை
பஞ்ச பூதங்களும் அவர்களின் சொத்து
அவர்களைப் பற்றி ஏதாவந்து பேசி உதைபடாதே
மூட்டை மூட்டையாக பணம் வைத்திருப்பவர்கள்
வெளிக்குப் போக வெளிநாடு செல்பவர்கள்
கோவிலிலிருக்கும் சாமி எழுந்து வந்து அவர்களை
வணங்கிச் செல்லும்
பலதேசத்து அதிபர்களுடன் மின்னஞ்சல் தொடர்புகளும்
பெரும் பணக்காரர்களுடன் காக்டெய்ல் பார்ட்டிகளும்
மலம் துடைக்க ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்
காவலுக்குக் கருப்புப் புலிகளும் கொண்ட
அவர்களைப் பற்றி பேசாதிருப்பது நல்லது
உனது ஏழு தலைமுறைகளும் அவர்களுக்கு
அடிமைப்பட்டது
நீ எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
எந்த நாட்டில் பிறந்தாலும்
உன்னை அடையாளம் கண்டு தூக்கி வந்துவிடுவார்கள்
உன்னை தடையமற்று செய்துவிடுவார்கள்
அடிமை நாயே
அவர்களைப் பற்றி பேசாதிருப்பது நல்லது
உனது ஒருபிடி வார்த்தைகளால் அவர்களை உன்னால்
ஒன்றும் செய்துவிட முடியாது – மூன்றாம் உலக
முட்டாள் கவியே
வார்த்தைகளைத் தின்னாதே
விதை

2.   மருந்தாக, போதையாக, இறந்தவனுக்குப் படையலாக இருக்கும் அதைக் குடிப்பவர்கள் அரசுக்கே அள்ளிக் கொடுக்கும் கர்ணன், ரட்சிக்கும் மேய்ப்பன் எனில், அவர்கள் பருகும் அது அவர்களுக்கு என்ன உறவு?

மாமது போற்றுதும்
-----------------------------------

பிரசவித்த பெண்ணுக்கு
சாராயம் கொடுப்போம்
பிறந்த சிசுவுக்கும்
சாராயம் கொடுப்போம்
காது வலித்தால் அதில்
சாராயம் ஊற்றுவோம்
பல்வலித்தால்
பஞ்சில் நனைத்து சாராயம் வைப்போம்
செத்தவருக்கு சாராயம் வைத்துப் படைப்போம்
வாழ்வின் எல்லாத் தருணங்களிலும்
மருந்தாகி நிற்கும் சாராயம்
என்றோ ஒருநாள் அம்மா சொன்னாள்
அப்பாவைக் கலக்காமலேயே
சாராயத்தால் உன்னைக் கருத்தரித்தேன் என்று

3.   விலா எலும்பிலிருந்து உருவாகியதாக சொல்லப்பட்டவள், தொன்மத்திற்கு பதில் சொல்கிறாள்…அதற்குள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது எனப் பொருள்படுமா

அல்லது

அவன் விலா எலும்பை அயுதமாக்க்கிக்கொண்டான் என்று நினைப்பதா…

ஜனன மரணம்
----------------------------

கோவில் மணியோசையின்
கார்வை
டிசம்பர் பனி இரவில்
இயேசு பிறந்த கணம்
என்னைக் கொல்கிறாய்
உனது விலா எலும்பை உருவி
எனது தொண்டையில் சொருகி

4    போரில் என்று எங்கும் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும், வெடிக்கிறது என்ற சொல் அவள் போர் நடக்கும்போது கொல்லப்பட்டதை  உணர்த்துகிறது.
தலைக்குள் பொட்டுப்படாசு வெடிக்கிறது என்பது அவள் தலையில் சிறு துகள்கள் தாக்கி இறந்திருப்பதாக எடுத்துக்கொண்டால், அவளைக் கொன்றது கொத்து குண்டுகளில் இருந்து தெரித்து வந்த சில்லுகளாக இருக்கலாம்.
‘அவள் இறந்து ஆறு மணித்தியாலங்கள் கடந்துவிட்டன’ என்பதை வைத்து ‘பொட்டுப்படாசு’ என்பது இறந்த பிறகும் சில மணிநேரங்கள் உயிர்த்திருக்கும் மூளையின் செயல்பாட்டால் மனதில் ஓடும் நினைவுகள், சிறு சப்தம் எழுப்பும் நிராசைகள், பிள்ளைப் பாசத்தின் தவிப்பு எனப் பலவாறாகவும் பொருள் தருகிறது.
  ‘பால் மெல்லத் திரிகிறது’ எனில் பால் பருகப்படாமல் மீதம் இருந்து திரிகிறதா… என்றால் குழந்தையும் இறந்துவிட்டதா…என்ற பதட்டத்தை ஏற்படுத்தி , நினைவில் அலறிக்கொண்டே இருக்கிறது.



திரியும் உயிர்ப்பு
-------------------------------

மடியில் இருத்தி
குழவிக்குப் பாலூட்டுகிறாள்
பசியின் மூர்க்கம்
முட்டி முட்டிக் குடிக்கிறது
அவள் தலைக்குள் பொட்டுப்படாசு வெடிக்கிறது
நாசியில் குருதி வழிகிறது
இரண்டு பிஞ்சுக் கைகளால்
அள்ளி எடுத்து முட்டி முட்டிக் குடிக்கிறது
அவள் இறந்து ஆறு மணித்தியாலங்கள்
கடந்துவிட்டன
சுரப்புகளில் பால் மெல்லத் திரிகிறது

5.      ‘பண்டிதர்’களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எப்போதுமே ‘நல்ல’ பொருத்தம், இதில்        ‘இம்போர்ட்டட்’ இசம் வேறு சேர்ந்துகொள்கிறது
பின்நவீனத்துவப் பன்றியம்
-----------------------------------------------
பல்கலைக் கழகத்தில் ஒரு
பன்றி
பின் நவீனத்துவம் பற்றிப் போதிக்கிறது
அதன் பின்பகுதிதான் பெரியது
மண்டைக்குள் வெற்றிடம்

புதுச்சேரியில்
அனைத்துப் பன்றிகளும்
பின்நவீனத்துவர்களாக ஆனது எப்படி
பாராளுமன்றம் மட்டுமா
பல்கலைக் கழகங்களும்
பன்றிகளின் தொழுவம் தாமோ


6.    சிலையைக் கடவுளாக்கி, கடவுளை மனிதனாக்கிப் பார்க்கும் கவிதை, காமத்தை கடவுளுக்குள் / கடவுளா(க்)கி அடக்க முடியுமா என்கிறதா…

      தழல்
      -----------

கருவறையில்
அம்மன் சிலை
தீப ஒளியில்
எண்ணெய் பூசப்பட்ட
கருந்தேகம் ஒளிர்கிறது

யாருமற்ற தனிமை
வெளியே பெருமழை
வெப்பப் பெருமூச்சில்
கோவில் சுவர்களும்
தூண்களும் தகிக்கின்றன

பாவம்
அவளும் பெண்தானே
            
  
            
7.   தேசபக்தியின் பெயரால் என்னவெல்லாம் செய்யப்படுகின்றன…

நாகாலாந்தின் நாட்டுப்புறப் பாட்டு
-------------------------------------------------------------
தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும்
தகுதியை அடைந்துவிட்டனர்
இந்திய நரிகள்
வெளியே போ வெள்ளை நாயே

தேசபக்திப் பாடல் எழுத நிர்பந்திக்கப்பட்டேன்
நாடற்றவன் ஊரற்றவன் உறவற்றவன்
ஆனால் அகதி அல்லன்

எழுதினால் ஆயிரம் ரூபாய் தருவார்கள்
யாருடைய உதவியும் இல்லாமல்
இரண்டு நாட்களுக்குக் குடிக்கலாம்
நரிக்கறி வறுவல் நாய்க்கறிக்குழம்பு

மனைவியின் துரோகத்தைப் போல
தேசபக்தி
கணவனின் கயமை போலபாடல்
மொழி புரியாத அகதி

பத்து ராணுவக் குறிகளால்
நார் நாராய்க் கிழிபடும்
பெண் மாவோப் பழங்குடி

முலைக்கறி மட்டுமே தின்று பழக்கப்பட்டோர்க்கு
பெண்குறியால் செய்த தேசபக்திப் பாடல்

எழுது எழுது
இல்லையெனில்
உன்னை ஓடவிட்டுச் சுடுவார்கள்
                  
8.    உன்னதங்களைப் பேசிக்கொண்டே வந்த கவிதை ‘பசிக்கிறது’ என்கிறபோது என்ன செய்கிறது…

சிலை
-----------
பூமியில் ஓரிடம் வேண்டும்
புதைக்கவோ விதைக்கவோ அல்ல
நான் வசிக்க

பூமியில் ஓரிடம் வேண்டும்
ஆக்கவோ அழிக்கவோ அல்ல
அன்னை வயிற்றினுள்
கருவாக
பூமியில் ஓரிடம் வேண்டும்
நான் நிற்க
சிலையாக அல்ல
உயிராக

நாற்சாலை நடுவே
நிற்கிறேன்
பசிக்கிறது
என்ன செய்யலாம்

       

                   ***

9.   தந்தை மீதும் குரு மீதும் கொள்ளும் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ பற்றியதா இக்கவிதை…

 மொழி அம்மா அரசியல் அப்பா எனில் கவிதை எப்படிப்பட்ட குழந்தை?

காலம் கடந்தபின்னும் அடங்காமல் பல போதைகளுடன் அலையும்  மூத்தவர்கள் மொழிக்குச் செய்வது என்ன…

அம்மா/ அப்பா மகனைக் கொல்லும், மகன் தந்தையைக் கொல்லும் இதிகாச கதைகளுக்கு எதிராக எதைச் சொல்கிறது இந்தக்கவிதை? தாயின் தலையைக் கொய்த பரசுராமன் கூட அவளை உயிர்ப்பிக்க தந்தையை வேண்டினானே…இந்தக் கவி என்ன செய்கிறான்…

சாராயத்தின் மீது சத்தியமாக
------------------------------------------------------


குடிப்பதற்குப் பணம் தராத தந்தையைக் கொல்லுதல்
பிரஞ்சிந்திய பொந்திஷேரியில்
அரிதான செயல் அல்ல
இங்குக் குடிகாரர்களை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை
அதிகம்தான் எனினும் தந்தையைக் கொன்ற கவிகள்
என்னைப் போல் வேறு இலர்

என் தந்தையை நான் ஏன் கொன்றேன்
நண்பர்கள் பலவிதமாயக் கிசுகிசுக்கிறார்கள்
உண்மையான காரணம் எனக்கு மட்டுதான் தெரியும்
அவர் தனது அறுபதாவது வயதில் என்னைப் பின்பற்றி
எழுதிய முதல் கவிதையைக் கூச்சமில்லாமல்
படிக்கச் சொல்லி அபிப்ராயம் கேட்டார்
அன்று அவர் நல்ல போதையிலிருந்தார்
நானோ கையில் பைசா இல்லாமல் காய்ந்து கிடந்தேன்
கிழவரின் வன்புணர்ச்சியிலிருந்து தமிழ்த்தாயைக் காக்க
அவர் தூங்கும்போது முகத்தில்
தலையணையை வைத்து அழுத்திக் கொன்றேன்

அப்பா எனக்குப் பிடித்தமானவர்
அம்மாவின் துரோகங்களால்
சாராயக்கடையில் ஒதுங்கியவர்
அம்மாவின் வயிற்றுள் நீந்தும்போதே
அவளின் கயமையை உணர்ந்தவன்
ஆதலால் பிறக்கும்போதே அவளைக் கொன்றேன்
அப்பா எழுதிய வெண்பா நான்
(இலக்கணப் பிழைகள் ஏராளம்)
மரபை மீறிய கவிஞன் நான்
அம்மாவைக் கொன்றதிலிருந்து நான்
எனது படைப்பை எழுதத் தொடங்கினேன்
ரத்தப் பிசுபிசுப்போடு எடுத்து
அப்பா வாசிக்கத் தொடங்கினார்

அப்பாவுக்கு பதில் அம்மா என்னை எழுதியிருந்தால்
செம்படைப்பாக நான் கவனம் பெற்றிருப்பேன்
அம்மாவின் முகம் ( புகைப்படம் ) என்னுடன் பேசும்
அவளுக்கு மூன்று கண்கள்
நெற்றிக் கண்ணுக்குப் புருவமில்லை
சில பொழுது பற்கள் தெரியச் சிரித்தபடியும்
சில நாட்கள் இமை மூடியபடியும்
சுவரில் புகைப்படம் அசையும்
நான் பிறக்கவும் அம்மா இறக்கவும்
ஈரசிசு அழவும் கணம் பிசகாமல் நிகழ்ந்ததாம்
அவள் மரணத்திற்கான முதல் அழுகை என்னுடையது
அழுகையிலிருந்து பிறந்தேன் அழுதுகொண்டே இருக்கிறேன்

அம்மாவையும் அப்பாவையும் ஒருசேரப் பார்க்காதவன்
அம்மாவையும் அப்பாவையும் தனித்தனியாய்க் கொன்றவன்
என்னுள் விளையும் கவித்துவம் போலக்
கொலைத் தொழில் பழகியவன்
நான் பாரதிதசனைப் போல ஒரு
புதுச்சேரிக்காரன்
நல்ல குடிகாரன்
கெட்ட கொலைகாரன்

10. அரச அதிகாரத்தின் , போரின் ரத்த வெறிக்கெதிராக பேசும் இக்கவிதை பெரியாரைப் பற்றி பாரதிதாசன் சொன்ன வரியைத் தலைப்பாகக் கொண்டிருக்கிறது. மொழியையும் அரசியலையும் ஆயுதமாகக் கொண்டு எழுந்த இயக்கங்கள் , இனப் படுகொலையின் போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற பெரிய கேள்வி இத்தலைப்பில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆண் நிலவுடமைச் சமுதாயம் , தன் மக்கள் மீதே அரசு பிரயோகிக்கும் வன்முறையின் வேட்கை  எனப் பல பரிமாணங்கள் ஒழுகும் கவிதை :






மனக்குகையில் சிறுத்தை எழும்
 ----------------------------------------------------------
( பாரிஸ் நகர மெட்ரோக்களில் ஒட்டப்பட்டிருந்த பிரசுக் கவிதையின் தமிழ் வடிவம்)

ராஜபக்சே
இன்னுமாடா தீரவில்லை
ரத்த தாகம்

மாதம் மூன்று நாட்களல்ல
மும்மாரி பொழிகிறது என் யோனி

வா
என்
சாண்டையைக்
குடி.
                                   ***
கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்புகள்:
*******************************************************************

1.   சாராயக்கடை ( உயிர்மை வெளி்யீடு ; டிசம்பர் 2008) :

வார்த்தைகளால் ஆனவனின் புலம்பல் ( பக்கம் 48)
மாமது போற்றுதும் ( பக்கம் 18)

2.   மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் ( புது எழுத்து வெளியீடு, ஜூலை 2013) :

ஜனன மரணம் (பக்கம் 18)
திரியும் உயிர்ப்பு (பக்கம் 25)
பின்நவீனத்துவப் பன்றியம் (பக்கம் 39)
தழல் (பக்கம் 146)
நாகாலாந்தின் நாட்டுப்புறப் பாட்டு (பக்கம்  196)
சிலை (பக்கம் 240)
மனக்குகையில் சிறுத்தை எழும் (பக்கம் 246)

3.   அயோனிகன் ( உயிர்மை வெளியீடு ; டிசம்பர் 2014 )


சாராயத்தின் மீது சத்தியமாக (பக்கம் 45)