பச்சை நிறத் தொலைபேசி
இருமுறை மணி அடித்து
நின்றது
யாருமில்லாத நேரம்
என்பதால்
அரசி சிலிர்த்தாள்
மீண்டும் அடித்தவுடன்
எடுத்தாள்
அவன் பேஜர்
‘மேகமூட்டமாய்
இருக்கிறது’ என்று அகவியது
அரைநாள் விடுப்பு
எடுத்துக்கொண்ட அவன்
தோகை விரித்தான்
அவன் மொபைலுக்கு
‘குட் ஈவினிங்’ என்ற
குறுஞ்செய்தி வந்தது
நிழல் சிறுத்த
வேளையில்
அவன் உடல் கொதித்தது
ஆவியாகி
சாலையில் மறைந்து
’கேட்’டைத் தாண்டி
உதித்தான்
‘ வாட்ஸ் அப்’பில்
கடிக்கப்படாத ஆப்பிள்
படத்தை அனுப்பினான்
‘பசிக்கிறது’ என்று
பதில் வந்தது
மொபைலின்
திரையைத் திறந்து
நிதானமாக நடந்து வரும்
அவன்
‘காலிங் பெல்’லை
அழுத்துகிறான்
ரெஸ்ட்டாரண்ட்டின்
மேசையில்
உடனிருப்பவனுக்குத் தெரியாமல்
தன் மொபலை
எதிரிலிருப்பவன்
மொபைலின் மேல்
தட்டுகிறாள்
எண்(ணம்) அலையில்
கடத்தப்பட்டு (ஈடு)ஏறுகிறது
கதவுக்கு இந்தப்புறம்
இருந்து
செய்யப்படும்
அழைப்பின் இசை
அந்தப்புறம் கேட்கிறது
பல கதவுகள்
திறக்கின்றன